TVK On CM Stalin: விஜயை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தவெகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஜயை மறைமுகமாக ஒருமையில் சாடிய ஸ்டாலின்?
சென்னை கொளத்தூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திமுக வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் வர்ரவன், போறவன் எல்லாம், புதிது புதிதாகக் கட்சி தொடங்குபவர் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று நினைக்கின்றனர்” என பேசினார். இந்த கருத்து அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய, விஜயை தான் குறிப்பதாக இருந்தது. இதனால், முதலமைச்சரின் பேச்சு இணையதளத்திலும் வைரலானது.
தமிழக வெற்றிக் கழகம் பதிலடி
இந்நிலையில், விஜயை முதலமைச்சர் ஒருமையில் பேசியதற்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி தந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன், “முதலில் தளபதி (விஜய்) கோடிக்கணக்கான தமிழ் மக்களால் நேசிக்கப்படும் மக்கள் தலைவர். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து இருக்கிறார். இது துரதிஷ்டவசமானது. அரசியல் எதிரிகளுக்கு இதுபோல பதில் பதில் கொடுப்பது சரியான போக்கு இல்லை. தமிழ்நாட்டில் தங்கள் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் எதிரிகளைத் தரக்குறைவாகப் பேசுவது திமுகவின் மரபணுவிலே இருக்கிறது. முதலமைச்சரின் பேச்சும் அதைத்தான் காட்டுகிறது. 1970-களில் ஆண்டு இந்த குடும்ப ஆட்சிக்கு எதிராகவே எம்ஜிஆர் கலகம் செய்தார். அந்த ஆட்சியை அகற்றியும் காட்டினார். வரும் 2026-ல் இந்த வரலாறு மீண்டும் திரும்பும். 2026-ல் இந்த குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார்" என தெரிவித்தார்.
திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்த விஜய்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கொள்கைகளை அறிவித்தார். அதோடு, திராவிட மாடல் என்ற பெயரில் திமுக தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகவும், அந்த கட்சி தான் தங்களது அரசியல் எதிரி எனவும் விஜய் வெளிப்படையாக அறிவித்தார். தொடர்ந்து கடந்த வாரம் நடந்த செயற்குழு கூட்டத்தில், திமுக அரசின் பல்வேறு திட்டங்களை சாடி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் தான், விஜயின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி தந்தார்.