நகர்புற உள்ளாட்சி தேர்தல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்து வருகிறது. இருந்தாலும், நேற்று நடந்த வேட்புமனுத்தாக்கல் தொடர்பான கலேபரங்கள் இன்னும் ஓயவில்லை.
நிறைய இடங்களில் வேட்புமனுத்தாக்கலில் சுவாரஸ்யங்களும், சங்கடங்களும் நடந்து கொண்டே தான் இருந்தது. அப்படி ஒரு நிகழ்வு தான், தஞ்சை மாநகராட்சியில் நடந்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக, தமிழ்நாடு முழுவதும் தனித்து போட்டி போடுகிறது. நேற்று தஞ்சை மாநகராட்சிக்கான வார்டு கவுன்சிலர் வேட்பாளர் மனுத்தாக்கலில் பாஜகவினர், கடும் நெருக்கடியை சந்தித்தனர்.
வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய 10 நிமிடம் இருந்த போது, வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த 15 வது வார்டு பாஜக வேட்பாளர் வனிதா, சில ஆவணங்களை தவறவிட்டதால், அவசர அவசரமாக உறவினர்களிடம் கூறி ஆவணங்களை எடுத்து வந்து மனுத்தாக்கல் செய்தார். இவராது பரவாயில்லை, 11 வது வார்டில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 75 வயதான மாரியப்பன் என்பவர், நேற்று மனுத்தாக்கல் செய்வதாக இருந்தது. இதற்காக அவரது வழக்கறிஞர் ஆவணங்கள் மற்றும் வேட்புமனுவோடு உதவி தேர்தல் அலுவலகத்தில் காத்திருந்தார்.
நேரம் செல்ல செல்ல, வேட்பாளரை காணவில்லை. இறுதியில் நேரம் முடிந்தது. அப்போது வரை வேட்பாளர் வரவில்லை. மனுவோடு காத்திருந்த வழக்கறிஞர், சம்மந்தப்பட்ட வேட்பாளர் மாரியப்பனை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‛ எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது... நான் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டேன்,’ என, வேட்பாளர் தெரிவித்துள்ளார். அதிர்ந்து போன வழக்கறிஞர், சரி முன்மொழிபவர் எங்கே? அவராவது வந்திருக்கலாமே என்று கேட்டுள்ளார். ‛முன்மொழிபவர்... என்னை நலம் விசாரிக்க வந்துவிட்டார்...’ என்று கூற, எரிச்சலடைந்த வழக்கறிஞர், உதவி தேர்தல் அலுவலரிடம் சென்று, நடந்ததை கூறினார்.
அதற்கு உதவி தேர்தல் அலுவலர், அவர்கள் இருவரும் வராமல், வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது என்று கூற, வேறு வழியின்றி அவருக்கு கும்பிடு போட்டு அங்கிருந்த புறப்பட்டார் வழக்கறிஞர். வேட்புமனுத்தாக்கல் செய்யாமலேயே 11வது வார்டு போட்டியில் இருந்து பாஜக விலகியது.
போட்டியில் இருந்து விலகுவதற்காகவே இந்த நூதன ஐடியாவை பாஜக வேட்பாளர் கையில் எடுத்ததாக அங்கு கிசுகிசுக்கப்படுகிறது. உண்மை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... குறைந்தபட்சம்.... வழக்கறிஞருக்காவது சொல்லியிருக்கலாம்... பாவம், மனிதர் மாலை 5 மணி வரை காத்திருந்து, ஏமாற்றத்துடன் சென்று விட்டார் என அவருக்காக அனுதாபம் தெரிவித்தனர் பலர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்