காலில் விழும் கலாச்சாரம் அதிமுகவில்தான் அதிகம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அவர் காலில் மிகவும் வயதானவர்களே விழுந்து எழுந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை எல்லாம் ஏற்காத திராவிட பாரம்பரியம் என்று கூறும் திமுகவிலும் தற்போது காலில் விழும் கலாச்சாரம் ஆரம்பித்து விட்டது.
தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக சார்பில், "விழுதுகளாக தாங்கி நிற்போரை தாங்கும்" பொற்கிழி வழங்கல், திமுக மூத்த முன்னோடிகளின் உருவப் படம் திறப்பு, கட்சி கொடியேற்று விழா என முப்பெரும் விழா நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கும்பகோணத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற பின்னர் தஞ்சை விழாவில் பங்கேற்க எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தார். முதல்வருக்கு எப்படி வரவேற்பு அளிப்பார்களோ அந்தளவிற்கு உதயநிதிக்கும் வரவேற்பு இருந்தது. கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் உதயநிதி வந்த கார் மிதந்து வந்தது. விழா நடக்கும் கலைஞர் அறிவாலயத்திற்கு அருகே கார் வந்து நின்றது.
வாழ்க கோஷம் விண்ணை அதிரடித்த நிலையில் அடுத்ததாக நடந்த சம்பவம் தான் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரில் இருந்து உதயநிதி இறங்குவதற்குள் கூட்டத்தினர் மத்தியில் புகுந்து வந்தார் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மேயருக்கான அங்கி அணிந்து டவாலியுடன் வந்த அவர் காரை விட்டு இறங்கி உதயநிதியை கண்டவுடன் பட்டென்று அவர் காலில் விழுந்து வணங்கினார். ஆனால் இதற்கு உதயநிதி எவ்வித மறுப்பும் சொல்லாமல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்.
சுற்றி நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நிற்கும் போது சாலையில் தஞ்சை மாநகராட்சியின் மேயர் என்ற பெருமையுடன் அதற்குரிய அங்கியை அணிந்தபடி உதயநிதி ஸ்டாலின் காலில் அவர் விழுந்து வணங்கிய சம்பவம் சில நிமிடங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
கடந்த 2017ம் ஆண்டு "அன்பின் அடையாளம் போதும். அடிமை நிலை வேண்டாம்" என்று செயல் தலைவராக பொறுப்பேற்ற போது திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் இருந்து சில வரிகள்... நேரில் சந்திக்க வரும் தொண்டர்கள் சிலர் ஆர்வம் மிகுதியால், நான் சற்றும் எதிர்பாராத நிலையில் என் காலில் விழுந்து வணங்க முயற்சிப்பது எனக்கு மனதளவில் பெரும் நெருக்கடியை உண்டாக்குகிறது. தொண்டர்கள் இப்படிக் காலில் விழுவதை நான் சிறிதும் விரும்புவதில்லை. இது எனக்கு சற்றும் உடன்பாடில்லாத செயல் என்பதுடன், சுயமரியாதைக் கொள்கை வழியில் தன்மானம் காக்கும் இந்த இயக்கத்திற்கும் எதிர்மறைச் செயலாகவும், உடன்பாடில்லாத செயலாகவும் அமைந்து விடுகிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதால், மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என சமத்துவ நிலைகாண உரிமைப் போராட்டம் நடத்திய திராவிட இயக்கத்தின் அரசியல் அமைப்பாக நம்முடைய கழகம் செயல்பட்டு வருகிறது. யார் காலிலும் விழ வேண்டிய அடிமை நிலை எந்த மனிதருக்கும் எப்போதும் ஏற்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, வெற்றி கண்ட இயக்கம் இது என்று தெரிவித்து இருந்தார். ஆனால் அவரது மகனான உதயநிதி தனது காலில் தஞ்சை மாநகர மேயர் விழுந்ததை ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியும் சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்