அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்து, பொதுக்குழுவில் வைத்து ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கலுக்கு பொதுக்குழு நடைபெற்ற 23ஆம் தேதி மாலையே டெல்லி சென்றார் ஒபிஎஸ்.



பொதுக்குழுவில் பங்கேற்ற ஓபிஎஸ்


24ஆம் தேதியான அடுத்த நாள் திரவுபதி முர்முவின் வேட்பு மனு தாக்கலில் பிரதமர் மோடியோடு பங்கேற்ற ஒ.பன்னீர்செல்வம், அவரை தனியாக சந்தித்து அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி பிரச்னை பற்றியும் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒற்றைத் தலைமையாக அறிவிக்க எடுக்கும் நடவடிக்கை பற்றியும் பேச நேரம் கேட்டதாக கூறப்பட்ட நிலையில், பல்வேறு அலுவல் காரணமாக பிரதமர் மோடியின் நேரம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும், டெல்லியில் இருந்தபடியே தன்னுடைய நிலையை பாஜக முக்கிய பிரமுகர்கள் மூலம் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனத்திற்கும் ஒபிஎஸ் கொண்டுசென்று சேர்த்துவிட்டார் என்றும், அதற்கு அவர்களும் ஒபிஎஸ்க்கு ஆதரவு கரம் நீட்ட ஒத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.


இந்நிலையில், 25ஆம் தேதி சென்னை திரும்பிய ஒபிஎஸ்-சிடம் ‘டெல்லி பயணம் எப்படி இருந்தது?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு  ’மகிழ்ச்சியாக அமைந்தது’ என ஒரு வார்த்தையில் சொல்லிச் சென்றார். அடுத்த நாளான 26ஆம் தேதி மதுரை வழியாக தேனி சென்ற ஒபிஎஸ்-க்கு அங்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மதுரை முதல் தேனி வரை வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்களும், ஒபிஎஸ் ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.


தேனி எல்லையை நெருங்கிய ஒ.பன்னீர்செல்வத்திற்கு அங்கு இன்னொரு நிகழ்ச்சிக்காக குழுமியிருந்த பாஜகவினர் அவரை வரவேற்று காவி துண்டை அவரது தோளில் போட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். காவித் துண்டு அவர் தோளில் போடப்பட்ட பிறகுதான், அவர் பாஜகவிற்கு செல்லப்போகிறார் என்ற பேச்சு எழத் தொடங்கியது.



காவித் துண்டுடன் ஓபிஎஸ்


இன்று திருச்சியில் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஒபிஎஸ் பாஜகவில் சேருவார், அங்கு செல்லப்போகிறார் என்று பேசியது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல பரபரவென பற்றிக்கொண்டது.


அதிமுக நிர்வாகிகளால் ஓரங்கட்டப்பட்டுவிட்ட ஒபிஎஸ், தனக்கு தொண்டர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொன்னாலும், அவர் பாஜக கட்சிக்கு செல்லும் முயற்சியில் இருக்கிறார் என்று வெளியாகும் செய்திகளும், முன்னாள் அமைச்சர் வளர்மதி சொல்வது எல்லாம் உண்மையா ? என்பது குறித்த கேள்விகளையெல்லாம் கேட்க,  தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளரும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவியை தொடர்பு கொண்டோம்.



சி.டி.ரவி, தேசிய பொதுச்செயலாளர் - தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர்


முதலில் அவர் எண்ணுக்கு அழைத்தபோது, அவர் கர்நாடகாவில் இல்லை டெல்லியில் இருக்கிறார் என்றும் நமது எண்ணை அவரிடம் கொடுத்து பேசச் சொல்கிறோம் எனவும் அவரது கர்நாடாக மாநில உதவியாளர் கூறினார். பின்னர் சில மணி நேரங்கள் கழித்து அழைத்த சி.டி.ரவியின் செயலாளர், அழைப்பை சிடி ரவிக்கு இணைத்தார். அப்போது அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, சில கேள்விகளை முன் வைத்தோம்.



ஓபிஎஸ்-சுடன் சிடி ரவி மற்றும் அண்ணாமலை



  • கேள்வி : அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஒபிஎஸ், பாஜவில் இணையப்போகிறார் என்று சொல்லப்படும் செய்தி உண்மையா ? அதற்கான முன்னெடுப்பை ஏதும் அவர் மேற்கொண்டுள்ளாரா ?


        சி.டி. ரவி : யார் இணையப்போகிறார்கள் என்று கேட்கின்றீர்கள் ?



  • கேள்வி : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்தான், பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் கசிகின்றனவே அது உண்மையா ?


         சி.டி.ரவி : சிரிக்கிறார்… அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது !



  • கேள்வி : ஒருவேளை, ஓபிஎஸ் பாஜகவில் இணைய விருப்பப்பட்டால் அவரை வரவேற்கவோ, இணைத்துக்கொள்ளவோ நீங்கள் தயாரா..?


       சி.டி.ரவி : அப்படியான கேள்வி இப்போது எழவில்லை. இது அனுமானத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி. யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க  விரும்பவில்லை. இந்த கேள்வியை முதலில் ஒபிஎஸ்-சிடம் கேட்டு ஒரு தெளிவை ஏற்படுத்துங்கள். அதற்கு முன்னர் நான் ஒன்றும் சொல்ல முடியாது.


அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஓபிஎஸ் பாஜகவில் சேருவார் என்று சொன்னது பற்றிய கேள்வியை நாம் முன் வைக்கும்போதே இது ‘This is Hypothetic Question, I am not answering this kind of hypothetic questions’ என்று முடித்துவிட்டு, ஒபிஎஸ் இது பற்றி ஏதேனும் பேசினால், அதன் பின்னர் தான் அந்த கருத்து பற்றி நான் பேச முடியும் என்று சொல்லி முடித்துவிடுகிறார்.