அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.


சுமந்த் சி ராமன் டிவீட்:


அதில், 22-23 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 21-22 நிதியாண்டில் வாங்கிய ரூ.87, 000 கோடியை விட ரூ.13, 000 கோடி அதிகம். மாநில அரசின் கடன் மொத்தமாக ரூ.6.5 லட்சம் கோடிக்கு மேல் இருக்கலாம். முந்தைய அரசு எப்படி மாநிலத்தை கடனில் தள்ளியது என்பது பற்றி ஊடகங்கள் விவாதம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது என சுமந்த் சி ராமன் குறிப்பிட்டுள்ளார்.






நிதியமைச்சர் கடும் விமர்சனம்:


இதற்காக, சுமந்த் சி ராமனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,  "சிறிய அறிவு ஒரு ஆபத்தான விஷயம் என்பதன் சுருக்கமாக சுமந்த் சி ராமன் இருக்கிறார். பற்றாக்குறை, கடன், நிதியாண்டு,உண்மை நிலை ஆகியவை குறித்து உளறுவதற்கு முன்பாக அறிந்திருக்க வேண்டிய அடிப்படைகளைக் கண்டறிய அவருக்கு ஒரு நாள் அவகாசம் வழங்குவோம். சுமந்த் சி ராமன் தன்னைத் திருத்திக் கொள்ளாவிட்டால், அவருடைய அறியாமையை வெளிக்கொணர ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிடுவேன்" எனவும், நிதியமைச்சர் எச்சரித்துள்ளார்.


திமுக ஆட்சியில் முன்னேற்றம் - பிடிஆர்


அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  திமுக அரசு அமைந்தது முதல் தமிழக அரசின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 6 மாதத்துக்கு ஒருமுறை மாநிலத்தின் மொத்த வரவு செலவு குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் சில குழப்பங்கள் உள்ளன. இருப்பினும் 2022 - 23 நிதியாண்டில் மாநில நிதிநிலையில் மிக சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.


கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது ஆட்சி காலத்தில் நிதி நிலை சிறப்பாக முன்னேறியது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னரான 7-8 ஆண்டுகளில் நிதி நிலை மிகவும் மோசமடைந்தது. உற்பத்தியில் 27% கடனுக்கும், 20% வட்டிக்கும் செலவிடப்பட்டது. தற்போது. பொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார். முன்னதாக, தமிழகத்தின் பொருளாதாரம், வளர்ச்சியை பாதிக்காமல் ஒரே ஆண்டில் வருவாய், நிதி பற்றாக்குறை, பணவீக்கத்தை குறைத்துள்ளோம் எனவும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி இருந்தார்.


இதனால், தமிழக அரசின் புதியதாக கடன் வாங்கும் அளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அரசின்புதிய கடன் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருக்கும் என சுமந்த் சி ராமன் தெரிவித்து இருப்பதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.