நடிகர் விஜயின் அரசியல் தொடர்பான பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


மாணவர்களை சந்தித்த விஜய்:


10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு, நடிகர் விஜய் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பேசிய விஜய் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.


விஜய் பேசிய அரசியல்:


அதன் தொடர்சியாக, அனைவருக்குமான கல்வி, தரமான கல்வி கட்டமைப்பு, ஊழலற்ற அரசு, சமத்துவம், சமூக அரசியல், நேர்மையான ஆட்சி, ஏற்றத்தாழ்வுகளை தவிர்ப்பது,  இளைஞர்களின் நலன், ஊழலை ஒழிப்பது, வாக்கிற்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பது, இன்றைய அரசியல் மற்றும் சமூகத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம், போலி செய்திகள் உள்ளிட்ட முக்கிய சமூக மற்றும் அரசியல் பிரச்னை தொடர்பாகவும் தனது கருத்துகளை முன்வைத்தார். அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு:


விஜயின் பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார். உங்களுக்கு ஏதும் பிரச்னையா? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரவேண்டும், வரவேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை” என பதிலளித்தார்.


திருமாவளவன் பாராட்டு:


விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் “நடிகர் விஜயின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கிறது. அவரின் செயல்பாடுகள் மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அம்பேத்கர் உள்ளிட்ட சமூகநீதி தலைவர்களை படியுங்கள்  என விஜய் வழிகாட்டியிருபதற்கு எனது பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.


சரத்குமார் வரவேற்பு:


விஜயின் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்விஜய் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார். நடிகர்கள் பலரும் பொதுநல சேவைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர் கல்விக்காக உதவி செய்திருக்கிறார். நல்ல விஷயம் தானே, வரவேற்கத்தக்க ஒன்று தான். விஜய் அரசியலுக்கு வரலாமா என்ற கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் நானும் சொல்கிறேன் என சரத்குமார் பதிலளித்துள்ளார்.


வாக்கை பிரிக்க முடியாது - சீமான்


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசும்போது “நான் பேசுவதைத் தான் தம்பி விஜய்  பேசியிருக்கிறார். எனவே அது எனக்குத்தான் வலிமை சேர்க்கும். அவர் பேசியது நியாயமான கருத்து அதனை யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்குக்கு பணம் கொடுப்பதில் தான் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது. நடிகர் விஜய் குறிப்பிட்ட தலைவர்களையும் படிக்கவேண்டும். அவர்களை தாண்டி பல தலைவர்களையும் படிக்கவேண்டும்.  என் ஓட்டை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது.  நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து அவர்களின் வாக்கை பிரிப்பார். இவர்களின் வாக்கை பிரிப்பார் என நாம் கூறிவிட முடியாது. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் திரைப்படத்தில் நடிப்பதே நாடாள தகுதி என்ற நிலை உள்ளது. எனது கொள்கை என்பது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தான். ஏனென்றால் மொழி, இனம், நிலவள பாதுகாப்புக்காக போராடும் தகுதியானவர்கள் எடுபடாமல் போய்விடுகின்றனர்” என்றார்.