தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திடீரென சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 3வது மூறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கவும் மரியாதை நிமித்தமாகவும் ஆர்.என்.ரவி மோடியை சந்தித்ததாக கூறப்பட்டாலும் தமிழ்நாடு குறித்து அந்த சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.


சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனையா ?


குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் செயல்பாடுகள், சட்ட ஒழுங்கு பிரச்னைகள், போதை பொருள் புழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை பட்டியலிட்டு தனி ஃபைலாக ஆளுநர் ரவி டெல்லி செல்லும் போது எடுத்துச் சென்றதாகவும், அதிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விவரங்களை அவர் தன்னுடன் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.


காவிரி விவகாரம் பற்றியும் பேசினாரா ஆளுநர் ?


காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டி ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திந்து பேசிய புகைப்படங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியே கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் நிலையில், காவிரி விவகாரத்தில் இரு அரசுகளுக்கும் இடையே கடுமையான முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் ஆளுநர் பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்தியிருப்பதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






டெல்லியில் ஆளுநர் – தமிழ்நாட்டில் மத்திய குழு


ஆளுநர் டெல்லிக்கு சென்றிருக்கும் இதே நேரத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, டெல்லியில் இருந்து தேசிய பட்டியல் ஆணையத்தின் மூத்த உறுப்பினர் ராமசந்திரன் சென்னை வந்துள்ளார். அவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று புலன்விசாரணை, கொலைக்கான சதி, பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பாஜக தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ள நிலையில், ஆளுநர் ரவி பிரமதர மோடியை சந்தித்துள்ளது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.