காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றி தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை கொடுக்காத கர்நாடக அரசை  வன்மையாக கண்டிக்கிறேன் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.




கன்னியாகுமரியில் நடைபெறும் காமராஜர் பிறந்த தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”காவிரி மேலாண்மை வாரியமும், மேலாண்மை ஒருங்கிணைப்பு குழுவும் என்ன ஆணையிட்டு இருக்கிறதோ அதனை கர்நாடக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்த தவறினால் மத்திய அரசு அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணை, காவிரி மேலாண்மை ஆணைய ஆணை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் என்ற முறையில் தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கொடுங்கள் என்று தண்ணீர் கொடுங்கள் என கர்நாடகாவிடமிருந்து தண்ணீரை பெற்று தர வேண்டும்.




தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலைகள் பற்றிய விசாரணையில் தமிழ்நாட்டு காவல்துறை மீது உலகம் முழுவதும் நம்பிக்கை இருக்கிறது. ஸ்காட்லாந்துக்கு இணையான காவல்துறையினர் என பெயர் எடுத்தவர்கள். புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. அத குறித்து நான் மீடியாவிடம் தற்போது எதுவும் சொல்ல முடியாது. காவல்துறை மீது நம்பிக்கை இருக்கு. ஆகவே சிபிஐ விசாரணை தேவையில்லை புலன் விசாரணை செய்யட்டும். விசாரணைக்கு குறைந்தபட்ச கால அவகாசம்  கொடுக்க வேண்டும். சில வழக்கில் உடனடியாக கண்டுபிடித்து விடுவார்கள். சில வழக்கு பிரச்சனை இருக்கிறது. தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது.


காங்கிரசின் கொள்கை மகாத்மா காந்தியின் கொள்கை கோட்பாடு எல்லாம் பூரண மதுவிலக்கு தான். எந்த ஒரு காங்கிரஸ்காரனும் அது வேண்டாம் என்று சொல்ல மாட்டான். காங்கிரஸ் கட்சி மதுவிலக்கை  கண்டிப்பாக வலியுறுத்தும்” என்றார். பேட்டியின் போது திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் அமிர்தராஜ், ரூபி மனோகரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.