பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக தமிழ்நாடு காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக துவக்கியுள்ளார்.


பட்ஜெட்டில் அறிவித்த முதல்வர் - செயல்படுத்திய உள்துறை செயலர்


கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்  தீவிரவாதத்தை தடுப்பதற்கு என்று மாநில அளவில் புதிய பிரிவு தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணையை உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ளார். கேரளா, மகாராஸ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் இப்போது தனியாக தீவிரவாதத்தை தடுப்பதற்கு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.


கோவை வெடித்த குண்டு - அலெர்ட் ஆன காவல்துறை


கடந்த ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து பலரை கைது செய்திருந்த நிலையில், சமீபத்தில் ஆளுநர் மாளிகை அருகே ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டை வீசினார், வட மாநில தொழிலாளர் போர்வையில் வங்க தேசத்தினர் தமிழ்நாட்டில் ஊடுருவி இருந்ததும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்து, அவர்கள் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் வந்து அஞ்சலி செலுத்தி சென்றதும் பெரும் சர்ச்சையானது.


தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு ATS


இப்படிப்பட்ட நிலையில்தான், தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தீவிரவாத தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை ஏ.டி.ஜி.பி மேற்பார்வையில் இயங்கும் இந்த பிரிவிற்கு டி.ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி தலைமை வகிப்பார் என்று உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உறுதுணையாக 4 எஸ்.பி.க்கள், 5 ஏ.எஸ்.பிக்கள், 13, டி.எஸ்.பிக்கள், 31 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 193 பேர் கொண்ட காவல் அமைப்பு தனியாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


காவல்துறையினருக்கு உதவுவதற்காக அமைச்சக பணியாளர்கள் 36 பேர் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு புதிதாக 89 வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.


கூடுதல் அதிகாரம்


தமிழ்நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தன்னிச்சையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் இந்த பிரிவுக்கு அதிரடியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  முதல் கட்டமாக சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு என்று தனியாக அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அலுவலகம் செயல்படும் இடத்தை காவல் நிலையமாக கருதி, சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் வழக்கு பதிவு செய்யவும் அரசாணையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


உளவுத்துறைக்கு கூடுதல் பலம் ATS


தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரிவினைவாதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையில் கியூ பிரிவு, முக்கியமான வழக்குகளை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி, மத்திய குற்றப்பிரிவு, இணையதள குற்றப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கென்று தனியாக இதுவரை எந்த அமைப்பும் தமிழ்நாட்டில் இல்லை. இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பணியையும் மாநில உளவுத்துறையே கவனித்து வந்தது.


NIA - மாற்றாக மாநில அளவில் ATS


இந்நிலையில், பயங்கரவாதம் தமிழ்நாட்டில் பரவுவதையும் அதில் ஈடுபட முயலும் நபர்களையும் முளையிலேயே கிள்ளி எறிய காவல்துறையில் அதற்கென்று தனிப்பிரிவு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக எழுந்திருந்தது. ஏனென்றால், தமிழ்நாட்டில் ஏதேனும் பயங்கரவாத செயல்கள் நடைபெற்றால் அதனை மத்திய அரசின் என்.ஐ.ஏ, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளே வந்து விசாரிக்க வேண்டிய நிலைமை இதுவரை இருந்தது. அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாகவும் பயங்கரவாதத்தை தமிழ்நாட்டில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியும் வகையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி காவல்துறையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.