தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமானவர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளை கலைஞர் நூற்றாண்டு விழா என்று தி.மு.க.வினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.


உடல் உறுப்பு தானம்:


தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்டங்களும், விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் தங்களால் முடிந்தவற்றை கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக செய்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளராக பொறுப்பு வகிப்பவர் முரளி. அவர் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்.






முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு:


தி.மு.க. நிர்வாகி குடும்பத்தினருடன் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு எடுத்ததைத் தொடர்ந்து, பலரும் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களது செயலை பாராட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “எங்கும் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞரின் திட்டங்களால் இப்போதும் பல கோடிப் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக அவர் அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எண்ணற்ற ஏழை எளியோர் உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளனர்.


அத்தகைய தாயுமான தலைவரது நூற்றாண்டில் தனது குடும்பத்துடன் உடலுறுப்புத் தானம் செய்ய முடிவெடுத்த சேலத்தைச் சேர்ந்த இந்தக் கழக உடன்பிறப்பின் செயலால் நெகிழ்கிறேன். கடந்த 2009-ஆம் ஆண்டே எனது துணைவியாரும் நானும் உடலுறுப்புகளைத் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துக் கையொப்பமிட்டு, அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்ததை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்! மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம்!”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க: Allegation On Bedi: மன உளைச்சலுக்கு ஆளாக்கினாரா ககன்தீப் சிங் பேடி? ஈரோடு கூடுதல் ஆட்சியர் பரபரப்பு புகார்


மேலும் படிக்க: Murasoli: சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகாரங்களில் தலையிடுகிறார்.. ஆளுநர் மீது முரசொலி கடும் விமர்சனம்