தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தன்னை துன்புறுத்தியதாக, தற்போதைய சுகாதாரத்துறை செயலாளராக உள்ள ககன் தீப் சிங் பேடி மீது ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் குற்றம்சாட்டியுள்ளார்.


ககன்தீப் சிங் பேடி:


ககன்தீப் சிங் பேடி சென்னை மாநாகர ஆட்சியராக இருந்ததன் மூலம், பொதுமக்களிடையே நன்கு பரிட்சையமானவர். வெள்ளம் மற்றும் கொரோனா காலகட்டத்தில் அதிவேக செயல்பாடு, பஞ்சாபை சேர்ந்தவராக இருந்தபோதும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசும் தமிழ் ஆகியவற்றின் மூலம் சமூக வலைதலங்களிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளார். சிறப்பான செயல்பாடு காரணமாக அண்மையில் அவர் சுகாதாரத்துறை செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் தான் அவர் சாதி ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக, ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்டியராக உள்ள மணீஷ் நர்னவாரே குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.


சாதிய கொடுமை - கூடுதல் ஆட்சியரின் கடிதம்:


அதில் ”கடந்த 14/06/21 முதல் 13/06/22 வரை சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றினேன். ககன்தீப் சிங் பேடியின் கீழ் பணியாற்றிய அந்த காலகட்டத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். குறிப்பிட்ட பணிக்காலத்தின் போது ககன் தீங் பேடியின் மோசமான நடவடிக்கைகளையும், தொல்லைகளையும் நான் எதிர்கொண்டேன். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்து உள்நோக்கத்துடன் அவர் அவ்வாறு செயல்பட்டார்.


எங்கு தொடங்கியது பிரச்னை..!


தனியார் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திக்கு எதிராக நான் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அதனை நீக்குமாறு ககன்தீப் சிங் பேடி கூறியதை ஏற்க மறுத்தேன். பின்பு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அறிவுரையை ஏற்று குறிப்பிட்ட டிவிட்டர் பதிவை நீக்கினேன்.  அன்று முதல் ககன் தீப் சிங் பேடி என்னை தனிப்பட்ட முறையில் குறிவைத்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். அவற்றில் சிலவற்றை கீழே குறிப்பிட்டுள்ளேன்.




குற்றச்சாட்டுகள்..



  • இரவு 8.30 மணிக்கு சுடுகாடு மூடப்பட்டு இருக்கும் என தெரிந்தும் அங்கு ஏதோ தவறு நடப்பதாக கூறி ஆய்வு செய்ய என்னை அனுப்பி வைத்தார்

  • எனது தலைமையிலான குழுக்களை முறையாக செயல்படவிடாமல் தடுத்து, அதன் வலுவற்றதாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்

  • முக்கிய அதிகாரிகள் பங்கேற்கும் ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்தின் போது வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்துவார்

  • எனக்கும், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணனுக்கும் இடையே விரிசல் ஏற்படச் செய்தார்

  •  ஒருமுறை இந்தூர் மாநகராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, நீ புத்த மதத்தைப் பின்பற்றிக் கொண்டு ஏன் உஜ்ஜய்ன் கோயிலுக்குச் செல்கிறாய் என்று கேட்டதோடு, பலமுறை சாதி ரீதியாகவும், மத நம்பிக்கை தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பி காயப்படுத்தினார்

  • கோப்புகளில் கையெழுத்திடுவதை தாமதப்படுத்தினார்

  • ஒரு கையெழுத்துக்காக இரவு வெகு நேரம் காத்திருக்கச் செய்வார். ஒரு வழியாக இரவில் காத்திருந்து அவரைப் பார்க்கச் சென்றால், நேரமாகிவிட்டது நாளை பார்க்கலாம் என்பார்.

  • மேலே பட்டியலிட்டது அனைத்தும் தொடர்ந்து நடைபெற்றவை. அதிலும் ஒரு சிலவற்றை தான் நான் இங்கு பட்டியிலிட்டுள்ளேன்


அவருடைய தொந்தரவு தாங்காமல் நான் மன அழுத்தத்திற்குச் சென்றேன். கதறி அழுதுள்ளேன், ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக சிகிச்சையும் பெற்றேன். இதுகுறித்து ககன்தீப் சிங் பேடியிடமே கூறிய பிறகும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. 





தற்கொலைக்கு முயன்றேன்..


ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் என் தந்தை ஊரில் இருந்து கிளம்பிவந்து என்னை தைரியப்படுத்தினார். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, மூத்த அதிகாரியாக இருந்து கொண்டு அவர் செய்த இந்த செயல்கள் அனைத்துமே எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று கோருகிறேன். என் துயர்மிகு காலத்தில் எனது மருத்துவரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஐஏஎஸ்-சும் உற்ற துணையாக இருந்து என்னைத் தேற்றினர்” என மணீஷ் நர்னவாரே குறிப்பிட்டுள்ளார்.


எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை:


இதுதொடர்பாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் "ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் தற்போதைய சுகாதாரத் துறை செயலாளர் பற்றி கூறியிருக்கும் புகார் அதிர்ச்சி அளிக்கிறது. ககன்தீப் சிங் பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தேன். அவர் பாகுபாடு காட்டி நான் பார்த்ததில்லை. அவர்மீது யாரும் இப்படி புகார் சொல்லி நான் கேட்டதில்லை. உயர் அதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு. பொது வெளியில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி முன்வைத்துள்ள இந்தப் புகாரை முதலமைச்சர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


குற்றச்சாட்டு தொடர்பாக ககன்தீப் சிங்..


இதனிடையே, குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்க ககன்தீப் சிங்கை, குறுஞ்செய்தி வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் ABP நிறுவனம் தொடர்பு கொண்டது. ஆனால், அவரது தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரைவில் ககன்தீப் சிங் பேடி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.