17 நாள் பயணமாக முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். அதன்பிறகு ஆட்சியிலும் திமுகவிலும் பெரும் மாற்றங்களை செய்ய அவர் திட்டமிட்டிருக்கிறார்.


அமைச்சரவை மாற்றமும் அமைப்பு மாற்றமும்


முதல்வர் வெளிநாடு செல்லும் முன்னரே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்படுவார், அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நிகழ்வில்லை. காரணம், முதல்வர் வெளிநாடு செல்லும் நிலையில், இப்படியான ஒரு பெரிய மாற்றத்தை இங்கு ஏற்படுத்த வேண்டாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.


ஆனால், அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தயாரக உள்ளது என்றும் அதில் சிறு, சிறு மாற்றங்களை செய்த பின்னர், முதல்வர் வெளிநாட்டில் இருந்து வந்த பின்னர் அறிவிப்பு வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதே மாதிரி, திமுகவிலும் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி முதல்வருக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதற்கும் முதல்வர் விரைவில் ஒப்புதல் அளித்து திமுகவிலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது.


திமுகவில் என்ன மாற்றம் ? ஒருங்கிணைப்பு குழு சொன்னது என்ன ?


வரவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற பல்வேறு வியூகங்களை ஒருங்கிணைப்பு குழு வகுத்துள்ளது. 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வென்று காட்ட வேண்டும் என முடிவில் பல்வேறு மாற்றங்கள் திமுகவில் ஏற்படுத்தப்படவுள்ளது.  உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலும் வருவதால், அதற்காக கட்டமைப்பு பணிகளை இப்போதே திமுக தொடங்கியுள்ளது.


மாவட்ட செயலாளர்கள் மாற்றமா ?


அதனடிப்படையில், அமைப்பு ரீதியாக மாவட்ட செயலாளர்களின் பதவி உயர்த்தப்படவுள்ளது. குறிப்பாக, 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற ரீதியில் விதிகள் திருத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


தொடர்ந்து மாவட்டத்தில் கோலோச்சி வரும் சில சீனியர்களுக்கு செக் வைக்கவும் இளைஞர்களூக்கு வாய்ப்பு தரவு இப்படியான ஒரு மாற்றத்தை உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சீனியர்கள் குறித்து நடிகர் ரஜினி பேசியதை உதயநிதி சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


புதியவர்களுக்கு வாய்ப்பு


கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு துடிப்புமிக்கவர்களும் இளைஞர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அதே வேளையில், தமிழக அமைச்சரவையிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






வெற்றியோடு திரும்பும் முதல்வர் – அச்சத்தில் முக்கிய புள்ளிகள்


வெளிநாடு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்த்த மகிழ்ச்சியில் முதல்வர் தமிழ்நாடு திரும்பவுள்ள நிலையில், அமைச்சரவையிலும் கட்சியிலும் யார் தலை உருளப்போகிறதோ என்ற அச்சத்தில் சீனியர்கள் சிலர் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், இளைஞர்களாக இருந்தும் சரியாக செயல்படாதவர்களையும் மாற்ற முதல்வர் முடிவு செய்து வருகிறார். இனி திமுகவிலும் ஆட்சியிலும் அதிரடி சரவெடிகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த விவகாரங்கள் குறித்தே நேற்று காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைப்பு குழுவினரிடம் ஆலோசனை நடத்தியுள்லதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.என்.நேரு, ஏ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி,  தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் உதயநிதி ஸ்டாலினும் இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.