சென்னையில் கடந்த 28ம் தேதி நள்ளிரவில் கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்ற இளம்பெண்களை மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் வழிமறித்ததும், விடாமல் துரத்திய சம்பவமும் மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியது.
பெண்களை துரத்திய விவகாரம்:
இந்த விவகாரத்தில் இளம்பெண்களை துரத்திய காரில் தி.மு.க. கொடி பொருத்தப்பட்டிருந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால், அவர்கள் யார்? என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த விவகாரத்தில் தி.மு.க.வை கண்டித்தும், கேலி செய்யும் விதமாகவும் தமிழக பா.ஜ.க. வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், தி.மு.க. கொடி கட்டிய கார் ஒன்று வருவது போலவும், அப்போது திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி ஒன்றில் குழந்தை வரான் உள்ளே போங்கடினு பெண்கள் அனைவரும் பயந்து கொண்டு உள்ளே செல்லும் காட்சியையும் ஒன்றிணைத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
தி.மு.க.வை கலாய்த்த பா.ஜ.க.
மேலும், ஓடி வருகிறான் உதயசூரியன் பாடல் பின்னணியில் ஒலிக்க, இளம்பெண்களை இளைஞர்கள் துரத்திய வீடியோவையும் இணைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கு எதிராக அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றனர். இந்த சூழலில், தி.மு.க.விற்கு நெருக்கடியும், பின்னடைவும் ஏற்படுத்தும் விதமாக இந்த விவகாரம் அமைந்துள்ளது.
ஆளுங்கட்சிக்கு பின்னடைவு:
ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் உள்ளேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தி.மு.க. அரசுக்கு பெரும் நெருக்கடியையும், பின்னடைவையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் முழுமையாக அகலாத நிலையில், தற்போது இசிஆர் சாலையில் நடுராத்திரியில் இளைஞர்கள் வழிமறித்த விவகாரம் மேலும் சறுக்கலை தி.மு.க.விற்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் பெண்கள் இளைஞர்களின் காரை இடித்துவிட்டுச் சென்றதாலே, இளைஞர்கள் சென்றதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தாங்கள் அவர்களின் வாகனத்தை இடிக்கவே இல்லை என்றும் புகார் அளித்த பெண்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், புகார் அளித்த பெண்களின் தகவல்கள் வெளியாகியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.