சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற இயல்பு கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில் கூட்டம் துவங்கியவுடன் திமுக மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிக்கு குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும், குடிநீர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அனைத்து பகுதிகளுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின் எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, அம்மாபேட்டை பகுதியில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, நடந்த மோசடி தொடர்பாக பேசத் துவங்கினார். இந்த மோசடிக்கும் இந்த மாமன்ற கூட்டத்திற்கு என்ன தொடர்பு என்று கூறி திமுக கவுன்சிலர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் சேலம் மாநகராட்சி பகுதியில் தனிக்குடிநீர் மூலமாக மீட்டர் பொருத்தம் திட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே சேலம் மாநகராட்சி பகுதிகளில் வரி உயர்வு காரணமாக மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் தனிக்குடிநீர் திட்டம் மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே மக்களுக்கு தேவையான தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்தி பத்து நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்வதற்கான காரணம் தனிக்குடிநீர் மூலமாக மீட்டர் பொருத்தும் திட்டத்தை கொண்டு வருவதற்காகவே என்று சாட்டினார். முறையான தண்ணீர் விநியோகம் செய்வதில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தனிக்குடிநீர் மூலம் மீட்டர் பொருத்துவதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்காக வருகின்ற மார்ச் மாதம் டெண்டர் விடப்பட உள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் போதுமான தண்ணீர் தற்போது வந்து கொண்டுள்ளது. இது தொடர்பாக மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையில் 11 உயர்மட்ட நீர்தேக்க தொட்டிகள் அமைத்தாலே மாநகராட்சிக்கு தேவையான அனைத்து தண்ணீர் தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும். ஆனால் அதை செய்யாமல் தனிக்குடிநீர் திட்டத்தின் மூலமாக மீட்டர் கொடுத்தும் திட்டத்தை கொண்டு வருவதற்காக மாநகராட்சி முயற்சிப்பதாக குற்றம்சாட்டியினை அதிமுக கவுன்சிலர்கள் முன்வைத்தனர். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக கவுன்சிலர்கள், "மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுக்கும் இந்த திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் தனி குடிநீர் திட்டத்திற்கு மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சொத்து வரி முதல் குப்பை வரி வரை மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் வரி வசூல் நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சி மக்களுக்கு போதுமான குடிநீர் தினசரி வந்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தனி குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சேலம் மாநகர பகுதிகளுக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை கண்டித்து இன்று மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி எழுப்பினோம், திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் மாமன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளோம்" என்று கூறினார்.