நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


இதுதொடர்பாக, அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, “ விசேஷ நாட்களில் வாழ்த்து சொல்வது என்பது தமிழர் மரபின் ஓர் அங்கம். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ள வாழ்த்துக்கள் சொல்வது தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் ஓர் வழக்கம். முழு மனதுடன் ஆட்சியாளர்கள் பகிரும் வாழ்த்துச் செய்தி அந்த மக்களின் மத நம்பிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதை குறிக்கிறது.




இப்படிப்பட்ட வாழ்த்துக்களை கூறுவதிலும் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவது சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும். அதிலும் குறிப்பிட்ட ஒரு சமூகம் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டுமே வாழ்த்து கூறாமல் இருப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு சென்ற ஆண்டும் வாழ்த்து சொல்லவில்லை. இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. தி.மு.க. தலைவராக நீங்கள் வாழ்த்து சொல்வதும், சொல்லாமல் இருப்பதும் கொள்கை ரீதியில் உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், இப்போதோ நீங்கள் அனைத்து தரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரஜை.




கிறிஸ்துவ, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்துக்களின் பண்டிகைகளின் போது வாழ்த்துகள் சொல்லாமல் இருப்பது ஏற்புடையதல்ல. தி.மு.க.வில் 90 சதவீத உறுப்பினர்கள் இந்துக்களே என்று சொல்லும் நீங்கள், உங்கள் வாழ்த்துச் செய்தி அவர்களையும் சென்றடையும் என்பதற்காகவாது நீங்கள் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்தலாமே?


தமிழ்நாட்டில் பெருவாரியாக கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் இருப்பது அந்த மக்களை ஒதுக்குவது போன்ற செயலாகும் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்வார் என்பதே எங்கள் நம்பிக்கை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்,