பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் நோக்கில் 'என் மண், என் மக்கள்' என்ற பாதயாத்திரையை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

 

நேற்று கடலூர் கூத்தப்பாக்கம் முருகன் கோயிலில் தனது யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை கடலூர் பாடலீஸ்வரர் கோயில் அருகே தேரடி தெருவில் பாதையாத்திரை முடித்து சிறப்புரை வழங்கினார். விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்ட மத்திய அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர் சென்னை புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற வெள்ள நிவாரண நிதி மத்திய அரசுடையது என்றும் அதில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது தான் திமுக அரசு என்று பேசினார்.



 

தி.மு.க.வினர், பா.ஜ.க.வை குறை கூற முடியாமல், கடந்த 2 ஆண்டுகளாக இந்தி திணிப்பு என்ற வார்த்தையை மட்டுமே திரும்ப திரும்ப சொல்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, திருக்குறளை கடந்த 2 ஆண்டுகளில் 29 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.வேளாண்துறை அமைச்சர், விவசாயிகளுக்காக எந்தவொரு திட்டங்களையும் செய்யவில்லை. மாறாக உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்காக கடலூர் மாவட்டத்தில் 622 இடங்களில் நிகழ்ச்சி நடத்தியதே அவரது சாதனை என்று கூறிய அவர் ஆனால் விவசாயிகளுக்கு சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அண்ணாமலை மட்டும் கடலூரில் கால் வைத்து பார்க்கட்டும் என சவால் விடுவார். சவால் விட்டதற்கு அப்புறமே கடலூருக்கு 4 முறை வந்து விட்டேன். பேசினால் செய்ய வேண்டும்., ஏதோ செஞ்சிருவேன் என்று சொன்னதற்காக தான் காத்து இருக்கிறேன். அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம். கடலூரில் யாராவது பா.ஜ.க.வினரை மிரட்டி அரசியல் செய்தால், ஒரு அடிக்கு, 10 அடியாக திருப்பி கொடுப்போம் என்று அவர் பேசினார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ”தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகு அதைப் பற்றி கூற முடியும். தவறு என்றால் அதை சுட்டிக் காட்டுகிறோம். எல்லாவற்றையும் வைத்து அரசியல் செய்யும் நோக்கம் இல்லை” என்று கூறினார்