தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாட்டில் உள்ள அணைகளைப் பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்புச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் அரசியல் செய்வதற்காக தி.மு.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர்.
காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசின் அலட்சியத்தால் 34 ஆண்டு காலமாக அணை பாதுகாப்பு மசோதா கிடப்பில் போடப்பட்டது. நாட்டிலுள்ள அணைத்து அணைகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளை முன்னெடுப்பதே இந்த மசோதாவின் நோக்கம்.
இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வழங்கிய ஆய்வறிக்கையின்படி, 2008-16 வரையில் 17 மாநிலங்களில் 2 மாநிலங்களில் மட்டுமே அணைகளின் பாதுகாப்பு தன்மை குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அணை பாதுகாப்பு மசோதா மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் அணை பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை உருவாக்குவது கட்டாயமாக்கப்படும்.
1986ம் ஆண்டின் அணை பாதுகாப்பு அறிக்கையில், அணைகளை பாதுகாக்க பொதுவான சட்டம் தேவை என பரிந்துரைக்கப்பட்டது. 2010-ல் நீர்வள நிலைக்குழுவானது அணை பாதுகாப்பு மசோதா, 2010 சட்டத்தை இயற்ற முன்வந்தது. அரசமைப்புச் சட்டம் பிரிவு 252 கீழ் அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், 15வது மக்களவைக்கு பின் இந்த மசோதா காலாவதியானது. பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாடு முழுவதற்குமான அணை பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்தது.
2016ம் ஆண்டு மசோதா வரைவு செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு மற்றும் கேரளாவை தவிர பெரும்பாலான மாநிலங்கள் மசோதாவை ஏற்றுக்கொண்டன. தங்கள் மாநிலத்தில் ஏற்கனவே அணை பராமரிப்புச் சட்டம் இருப்பதாக கேரளாவும், அணையின் உரிமை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு இந்த சட்டத்தை எதிர்த்தன.
2017ல் 37வது தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டத்தில், மாநில பிரதிநிதிகளின் பரிந்துரைப்படி சட்டமசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழக கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சட்டம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைத்தனர். அவர்களுடைய வாதங்கள் மேம்போக்காக இருந்தது. எந்த ஒரு விதியையும் குறிப்பிட்டு தவறு என சுட்டிக்காட்ட முடியவில்லை. 1986ம் ஆண்டு அறிக்கையின்படி, மத்திய அரசு அணைகளின் பாதுகாப்பு மற்றும் பொதுநலன் கருதி இந்த சட்டத்தை இயற்றும் என்று தெரிவிக்கப்பட்டது.
அணை பாதுகாப்பு மசோதாவின் முக்கிய அம்சங்கள் :
நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. மாநிலங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள், அணைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய ஒரு அமைப்பை நிறுவிக்கொள்ளலாம். மாநில அரசுகள் நியமித்த உறுப்பினர்களை கொண்ட தேசிய அணைப் பாதுகாப்பு குழு நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்காக ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை உருவாக்கும். தேசிய அணைப் பாதுகாப்பு குழுவில், 10 உறுப்பினர்களில் 7 உறுப்பினர்கள் மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருப்பார்கள்.
தற்போதைய அணை பாதுகாப்பு மசோதாவானது அணைப் பராமரிப்பில் மாநிலங்களில் பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. எனவே, இந்த சட்டம் மாநிலங்களுக்கு கூடுதல் பங்களிப்பைத் தருகின்றது. அரசியலாக்கப்படும் மத்திய அரசின் மசோதாக்களின் நன்மைகளை பற்றியும், மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்