முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட கலர் டிவி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 7ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். கலர் டிவி ஊழல், டான்சி நில பேரம் உள்ளிட்ட ஏழு வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஜெயலலிதாவின் அமைச்சரவை சகாக்கள் தொடங்கி சசிகலா வரை பலரும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தனர். ஜெயலலிதா மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று தமாகா உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தன. அதனால் எந்த நிமிடத்திலும் ஜெயலலிதா கைது செய்யப்படக்கூடும் என்ற சூழல் நிலவியது. அதைப் புரிந்துகொண்ட ஜெயலலிதா ஏழு வழக்குகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்த முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினார்.


 


அந்த மனு நிராகரிக்கப்படவே, ஏழு வழக்குகளுக்கும் தனித்தனியே முன்ஜாமீன் கோரினார். அந்த ஏழு மனுக்களையும் நீதிபதி சிவப்பா பாரபட்சம் இன்றி தள்ளுபடி செய்யவே, ஜெயலலிதாவைக் கைது செய்யத் தயாரானது திமுக அரசு. உரிய உத்தரவுகள் வெளியாகின. ஜெயலலிதா கைது செய்யப்பட்டால் ஏற்படப்போகும் சட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் கையாளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1996ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி காலையிலேயே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் சுற்றி வளைக்கப்பட்டது. பின்னர் அரஸ்ட் வாரண்டை எடுத்துக் கொண்டு வீட்டின் உள்ளே காவல் துறை உயரதிகாரிகள் நுழைந்தனர். இதையடுத்து பூஜையை முடித்துவிட்டு வருவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். அது வரை வீட்டு வளாகத்தில் போலீஸார் காத்திருந்தனர். இதையடுத்து ஜெயலலிதா பூஜை செய்துவிட்டு காலை சிற்றுண்டியை சாப்பிட்டு தேவையான துணிகளை பெட்டியில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். 


 


அப்போது ஜெயலலிதாவை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது போயஸ் கார்டனை சுற்றியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் கைதை எதிர்த்து கோஷமிட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறிவிட்டு தொண்டர்களுக்கு கை அசைத்துவிட்டு காவல் துறை வாகனத்தில் ஏறி புறப்பட்டார். நேராக நீதிபதி ஏ.ராமமூர்த்தியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. வழக்கு, கைது விவரங்களைப் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவை சென்னை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி ராமமூர்த்தி. அப்போது நீதிபதியிடம் பேசிய ஜெயலலிதா, “குண்டர் சட்டம், தடா சட்டம் உள்ளிட்ட சட்டங்களின்கீழ் பலரைக் கைதுசெய்வதற்கான உத்தரவில் தான் முதலமைச்சராக இருந்தபோது கையெழுத்திட்டிருப்பதால், சிறையிலிருக்கும் நபர்களால் தனது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும்” என்றார்.



அதைக் கேட்ட நீதிபதி ராமமூர்த்தி, சிறையில் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பைத் தரும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட கைதி எண்: 2529. மொத்தம் 28 நாட்களுக்கு நீடித்தது ஜெயலலிதாவின் முதல் சிறைவாசம். அந்தச் சம்பவம் நிகழ்ந்து இன்றோடு இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன! அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி சிவப்பா அதிரடியாக ஜாமீன் வழங்கும் அமர்விலிருந்து மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் ஜாமீன் வழங்கும் பெஞ்சுக்கு புதிய நீதிபதியாக ஜி.ரங்கசாமி என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்தை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஏ.சாமி எடுத்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை வீசத் தொடங்கியதை உணர்ந்த திமுக அரசு ஜெயலலிதாவின் ஜாமீன் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை என்ற முடிவை எடுத்தது. இதையடுத்து ஜெயலலிதாவுக்கு நீதிபதி ஜி.ரங்கசாமி ஜாமீன் வழங்கினார். மொத்தம் 28 நாட்கள் ஜெயலலிதா சிறையில் இருந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிகழ்ந்த போதிலும் தொண்டர்கள் மிகவும் உணர்ச்சிபெருக்குடன் அதை இன்றும் நினைத்து பார்த்து மனம் வருந்துகிறார்கள்.