சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாது என மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.


அடித்தள மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா? என இன்று மக்களவையில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.


இதற்கு, எஸ்சி, எஸ்டி பிரிவினரைத் தவிர மற்றவர்களை சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வதில்லை என அதற்கு உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


திருமாவளவன் எழுப்பிய கேள்விகள் விவரம்:


1. அடித்தள மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா? 
2. அப்படியென்றால் அதன் தகவல்கள் விளக்கப்படுமா?
3. அவ்வாறு நடத்தப்படாது என்றாலும் அதற்கான காரணம் என்ன?


இந்தக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்கள்.
கேள்விகள் 1 முதல் 3க்குமான பதில். பட்டியல் இனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள சாதியினர், பழங்குடியினர் தவிர வேறு யாரையும் சாதி வாரியாக கணக்கெடுக்கப் போவதில்லை. அரசியல் சாசன சட்ட உத்தரவு 1950ன் படி பட்டியல்படுத்தப்பட்டுள்ள இனம் மட்டுமே சாதிவாரி கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. சுதந்திர காலம் தொட்டு இதுவே நடைமுறையாக உள்ளது. ஆகையால் இந்திய அரசாங்கமும் எஸ்சி எஸ்டி பிரிவினரைத் தவிர மற்றவர்களை சாதிவாரிக் கணக்குக்கு உட்படுத்தியது இல்லை. சென்சஸ் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனையின்படி திட்டமிட்டு வகுக்கப்பட்டுள்ளது. 


இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும் 2021 சென்சஸின் நோக்கம் என்னவென்பது 2019 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த வேளையில் கொரோனா பெருந்தொற்று வேகமெடுத்ததால் அப்போது மக்கள் தொகை கணக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இவ்வாறு மத்திய உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.


இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் “சாதிவாரிக் கணக்கெடுப்பு” நடத்தவேண்டும் எனக் கோரி வருகின்றன. 2011-ல் இந்தியா முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு (Socio Economic Caste Census - SECC) எடுக்கப்பட்டது.


அந்தக் கணக்கெடுப்பில் மற்ற விவரங்களை வெளியிட்டுவிட்டு சாதிவாரி மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களை மட்டும் மத்திய அரசு வெளியிடாமல் வைத்துள்ளது என்பது திருமாவளவன் நீண்ட நாட்களாக முன்வைக்கும் வாதம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் அதன் புள்ளிவிவரங்களையும் வெளியிட வேண்டும் என்று அவர் கோரி வந்தார்.


இந்நிலையில், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அவர் முன்வைத்துள்ள கேள்விக்கு உள்துறை அமைச்சகம் இவ்வாறாக எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.