சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,  


“ அமைச்சர் பச்சைத் துண்டுகள் போட்டவர்கள் எல்லாம் விவசாயியா..? என்று கேட்கிறார். அமைச்சர் பச்சைத்துண்டு போட்ட மு.க.ஸ்டாலினையும் சேர்த்து விவசாயியா? என்று கேட்கிறார். நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயம் செய்யக்கூடிய விவசாயி கிடையாது. சொந்தமாக நிலத்தில் இறங்கி விவசாயம் செய்யும் விவசாயி கிடையாது. மேடையில் பச்சைத் துண்டு போட்டு பேசுபவர்.


அந்த கட்சியே தமிழகத்தை இப்படிதான் பார்க்கிறார்களா..? எட்டுவழிச்சாலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? அவர்களது மனசு மாறியிருக்கிறதா? மாறினால் எதற்காக மாறியிருக்கிறது? அப்படி இருந்தால் மத்திய அரசின் ஏராளமான திட்டங்களை எதற்காக எதிர்த்தார்கள்? தமிழக மக்களுக்கு முதல்வர் நேரடியாக விளக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.




இதே பிரச்சினை சென்னை பரந்தூர் விமான நிலையத்திற்கு உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதுதான் பாரத பிரதமர் மோடியின் கனவு. எங்கே எல்லாம் பெரிய விமான நிலையங்கள் வரவில்லையோ, அங்கே சிறிய விமான நிலையங்களை கொண்டு வர பாரத பிரதமர் உந்துசக்தியாக இருந்துள்ளார்.


மேலும் படிக்க : ‘ஓபிஎஸ் சொல்வது சரியான கருத்து; அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ - டிடிவி தினகரன்


பரந்தூர் விமான நிலையம் 20 ஆயிரம் கோடி செலவில் வர உள்ளது.   கடந்த ஆட்சியில் பரந்தூர் மட்டுமில்லாமல் இன்னொரு இடத்தையும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சியில் இருந்த தி.மு.க. கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு இடத்தை விட்டுவிட்டு, 4 இடத்தை அனுப்பினார்கள். தேர்வு செய்த இடம் அனைத்துவித பல கட்ட சோதனைக்கு பிறகே அனுமதி கிடைக்கும்.




ஆனால், மாநில அரசின் திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், வெளிப்படைத்தன்மை காரணமாக இல்லாத காரணத்தாலும் பரந்தூரில் இருப்பவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தி.மு.க. அரசின் திட்டமிடல் சரியில்லாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு வரும் திட்டத்திற்கு இவர்களாகவே தடையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.


எந்தவிதமான கோரிக்கையை அரசே வைத்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நமக்கு தெரியவந்துள்ளது. இதைச்சரி செய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. விமான நிலையம் பரந்தூரில் வர முடியாவிட்டால், அ.தி.மு.க. அரசு மாமண்டூரை பரிசீலித்தது.


தி.மு.க. ஆட்சியில் பரந்தூர், படலம், திருப்போரூர், பன்னூர் ஆகிய பகுதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2வது விமான நிலையம் தமிழ்நாட்டிற்கு கண்டிப்பாக வேண்டும். இதனால், பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பிரச்சினை இல்லாமல் வேகமாக விரைந்து விமான நிலைய திட்டத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். “


இவ்வாறு அவர் கூறினார்.


 மேலும் படிக்க : இதை நிரூபித்தால் கட்சியை உடனே கலைக்க ரெடி - விஜயகாந்த மகன் பரபரப்பு பேச்சு..!


மேலும் படிக்க : சசிகலா, விஜயபாஸ்கரிடம் விசாரணை? ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முடிவு