ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடந்த அமைச்சரைவைக் கூட்டத்தில் இந்த விசாரணை ஆணைய அறிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா,  சிவகுமார், சி.விஜயபாஸ்கர், ராமமோகனராவ் ஆகியோர் மீது அரசு விசாரணை (காவல் துறை விசாரணை) நடத்த உத்தரவிட  தமிழ்நாடு அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் சட்ட வல்லுனர்கள் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்ட பின் இதற்கான விவர அறிக்கையுடன் சமர்ப்பிக்கப்படும் என்றும், நடவடிக்கை மேற்கொண்டதற்கான விவர அறிக்கையுடன் ஆணையத்தின் அறிக்கையை சட்டப்பேரவையில் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.


இந்நிலையில், ஏற்கெனவே கோடநாடு வழக்கில் காவல் துறையினர் விசாரணை வளையத்தில் சசிகலா உள்ள நிலையில், ஜெயலலிதா மரண வழக்கிலும் போலீஸ் விசாரணையை அவர் சந்திக்க வேண்டியிருக்கிறது.


ஜெயலலிதா மரணம்..


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக சில கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.


இது ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017 செப்டம்பர் மாதம் முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது. ஆணையம் சார்பாக இதுவரை 151 பேரிடமும், தங்களை விசாரிக்க வேண்டும் என்று தானாக முன்வந்த 7 பேரிடம் ஆணையம் விசாரணையை நடத்தியுள்ளது.


இதில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள்., சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்., காவல்துறை உயரதிகாரிகள்., போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்றுள்ளது.


முடங்கியது..


இப்படிபட்ட சூழலில் தான் 90 சதவீத பணிகள் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவர்களின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்வதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஆனால் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு சென்ற அப்பல்லோ மருத்துவமனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியது. இதன் காரணமாக சுமார் 2 வருடங்கள் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல் ஆணையம் முடங்கியது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு அமைத்து ஆணையம் தனது விசாரணை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது பின்னர் இறுதியாக ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தின் ஆஜராகி தனது வாக்கு மூலங்களை கொடுத்தார்.


தொடர்ந்து இந்த ஆணையம் பல மருத்துவர்களிடமும் குறுக்கு விசாரணையும் செய்தது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை 7 பேர் கொண்ட மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவ குழு கூறியது. 


இந்த நிலையில், தமிழ்நாடு அரசிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 27) தனது அறிக்கையை அளித்துள்ளது. இந்த அறிக்கை சுமார் 600 பக்கங்களுக்குள் கொண்ட அறிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.