சட்டசபை கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரத்தின்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி “கோவை மேற்கு மாவட்டத்தில் சாலை அமைப்பதற்காக ரூபாய் 400 கோடி நிதி முன்னாள் முதலமைச்சரான எதிர்க்கட்சித் தலைவரால் ஒதுக்கப்பட்டது. தற்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சாலை பாலக்காடு மதுக்கரை சுகுணாபுரம் ஆரம்பித்து பெருநாயக்கம்பாளையம் நரசிங்கநாயக்கபாளையம் வழியாக செல்கிறது.
நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்போது நிலம் எடுக்கும் பணிகள் வேகம் குறைந்துள்ளதாக கேள்விப்படுகிறோம். இது பல சாலைகளை இணைக்கும் சாலை. இதனால், நில எடுப்பு பணிகள் நிறைவுற்ற பகுதிகள் வரை சாலைகள் அமைத்தால் நன்றாக இருக்கும். கேரளாவில் இருந்து கோவை வருபவர்கள் நீலகிரி செல்வதற்கு சுலபமாக இந்த சாலை இருக்கும் என்பதால் விரைவாக முடித்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, “எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடா வேலுமணி கூறியிருப்பது நல்ல கருத்துதான். சாலைகளை அமைக்க வேண்டும் என்றால் நில எடுப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்தால்தான் சாலைகளை அமைக்க முடியும். சில நேரங்களில் 50 சதவீதம் நிலம் எடுத்துவிட்டு சாலை அமைப்பு பணிகளை தொடங்கி மீதமுள்ள இடங்களில் காலதாமதமானால், அரசின் பணம் வீணாகும். சாலைகளும் பயன்பாடற்றுவிடும். ஆனால், கோவையை பொறுத்தவரை அந்த நிலை இல்லை. ஒவ்வொரு சாலையையும் இணைக்கும் அளவிற்குதான் அந்த மேற்கு புறவழிச்சாலை உள்ளது.
இந்த சாலைப்பணி மூன்று கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்டத்திற்கான நில எடுப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்தாண்டே சாலை அமைப்பதற்கு 250 கோடி திட்ட மதிப்பீடு தயாராகிக் கொண்டிருக்கிறது. அது ஒப்பந்தம் கோரப்பட்டு அது முடிந்தாலே கேரளாவில் இருந்து இணைக்கிற சாலையாக அது அமைந்துவிடும். இரண்டாவது கட்ட பணியில் 70 சதவீத நில எடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. மூன்றாவது கட்ட பணியில் 50 சதவீத நில எடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ செய்து நில எடுப்பு பணிகளை முடிப்போம்”
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்