தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
7 மணிக்கு வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் சரியாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 3 ஆயிரத்து 998 நபர்கள் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான பரப்புரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு பெற்ற நிலையில், தொகுதிக்கு தொடர்பில்லாத அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவப்படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும், 10 ஆயிரத்து 183 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிய ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி அலுவலர்களாக 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 நபர்கள் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 8 ஆயிரத்து 014 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 165 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 91 ஆயிரத்து 180 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
சுகாதாரப் பணியாளர்கள்
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பு கவச உடை வழங்குவது, அதை திரும்ப பெற்று முறையாக அழிப்பது, வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் வாக்களிப்பது, முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.
வாக்காளர்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 1950 என்ற உதவி எண் சேவையும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் 46 ஆயிரத்து 203 வாக்குச்சாவடிகள் மட்டும் கண்காணிப்பு மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
மகளிர் வாக்குச்சாவடிகள்
இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தபால் வாக்கு செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதன்படி, இதுவரை முதியோர்கள் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 நபர்கள் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 28 ஆயிரத்து 159 நபர்கள் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மகளிர் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 234 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் என 235 மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொடங்க உள்ள வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களின் மாதிரி வாக்குப்பதிவு சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ நேற்று கூறினார்.