Tamilisai On Amit shah: உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டிக்கவில்லை எனவும், அறிவுரை மட்டுமே வழங்கியதாகவும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்:
வைரல் வீடியோ தொடர்பாக தமிழிசை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நேற்று நான் நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா வை 2024 தேர்தலுக்குப் பிறகு ஆந்திராவில் முதன்முறையாக சந்தித்தேன். அப்போது, அவர் என்னை அழைத்து தேர்தலுக்கு பிந்தைய சூழல்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிக் கேட்டறிந்தார். அதுபற்றி நான் விவரித்துக் கொண்டிருந்தபோது, நேரமின்மையால் மிகுந்த அக்கறையுடன் அவர் அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார். தேவையற்ற ஊகங்களை தெளிவுபடுத்துவதற்கான இதனை பதிவிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசையை கண்டித்தாரா அமித் ஷா?
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அமித் ஷா, மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தமிழிசை இருவரையும் நோக்கி வணக்கம் வைத்து விட்டு கடந்து சென்றார். திடிரென ஏதோ நியாபகம் வந்ததாக, அமித் ஷா தமிழிசையை அழைத்தார். எதையோ செய்ய வேண்டாம் எனபது போல பேசினார். தமிழிசை அதற்கு விளக்கம் கொடுக்க முயல, அதனை ஏற்க மறுத்து திட்டவட்டமாக இதெல்லாம் செய்ய வேண்டாம் என்பதை போல சைகை செய்து அறிவுறுத்தி அனுப்பினார். இதுதொடர்பான விடியோ இணையத்தில் வைரலாக, மாநில தலைமைக்கு எதிராக தமிழிசை பேசியது பாஜக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே, அமித் ஷா தமிழிசையை கண்டித்ததாகவும் கூறினர். இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவரை, மேடையில் வைத்து இப்படியா நடத்துவது என பலரும் சாடினார். திமுக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சியினரும் கூட கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தான், அமித் ஷா தனக்கு அறிவுரை மட்டுமே வழங்கியதாக தமிழிசை விளக்கமளித்துள்ளார்.
பாஜகவில் புதிய கட்டுப்பாடு:
அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை, ”நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியில் நான் தலைவராக இருந்த போது கட்டுப்பாடு இருந்தது. சமூக விரோத ரவுடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன். இப்போது அப்படி கட்சியில் சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர” என அண்ணாமலையை மறைமுகமாக சாடியிருந்தார். பாஜக பிரமுகர் கல்யாணராமன் என்பவரும் சமூக வலைதளங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனால் ஏற்பட்ட உட்கட்சி பூசலை தவிர்க்கும் விதமாக, அநாவசியமாக பொது இடங்களில் யாரும் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது பாஜக தலைமை தமிழக நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.