ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன்  பேசியது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்  அளித்துள்ளார். 


மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் பேசினோம் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்  அளித்துள்ளார். 


தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தாரா அமித்ஷா:


ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சென்ற முன்னாள் ஆளுநரும் தமிழ்நாட்டை சேர்தவருமான தமிழிசை சவுந்தரராஜனை மேடையிலேயே அமித் ஷா அருகே அழைத்து, விரலை நீட்டி அவரை கண்டிப்பதுபோல், கடுமையான முகத்துடன் பேசியது இப்போது தமிழ்நாட்டில் பேசுபொருளாகியது.


ஒரு நேர்காணலில் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை குறித்து மறைமுகமாக தமிழிசை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த விவகாரம் தொடர்பாக, அண்ணாமலை அமித் ஷாவிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்துதான், விழா மேடையில் வணக்கம் சொல்ல வந்த தமிழிசையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோபத்துடன் விரலை நீட்டி கண்டித்து பேசியதாக பரபரப்பு செய்தி வெளியானது.




ஆனால், உண்மையில் தமிழிசையிடம் அமித் ஷா என்ன சொன்னார் என முழுமையாக யாருக்கும் தெரியாத நிலையில், அமித் ஷாவின் உடல் மொழியை வைத்து, அவர் தமிழிசையை ஏதோ ஒரு விஷயத்திற்காக கண்டித்துள்ளார் என்றே  ஊடகங்களும் சமூக வலைதள வாசிகளும் புரிந்துக்கொண்டு அந்த வீடியோவை வைரல ஆக்கினர்


தமிழிசை விளக்கம்:


இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது,  நேற்று நான் நமது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, 2024 தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் நடைபெற்ற முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் சந்தித்தேன்.


அப்போது, வாக்கெடுப்பு பின்பான நிலை குறித்தும் மற்றும் சவால்கள் குறித்தும் கேட்டார். மேலும் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார். மேலும், இது அனைத்து தேவையற்ற யூகங்களையும் தெளிவுபடுத்தும் எனவும் பதிவிட்டுள்ளார்.






X தளத்தில், இந்த தகவலை பதிவிட்டுள்ள முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை டேக் செய்துள்ளார்.