Lok Sabha Speaker Election: நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில், பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருமே தீவிரம் காட்டுகின்றனர்.


நாடாளுமன்ற கூட்டத்தொடர்:


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பானமையை எட்டமுடியவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவுடன், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்துள்ளது. புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து நடைபெற உள்ள முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர், வரும் ஜூன் 24ல் துவங்கி, எட்டு நாட்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய எம்.பிக்கள் பதவியேற்பு மற்றும் புதிய மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.


மக்களவை சபாநாயகர் தேர்தல்:


அரசியலமைப்புச் சட்டத்தின் 93வது பிரிவின்படி, புதிய மக்களவையின் முதல் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கு முன்னரே சபாநாயகர் பதவி காலியாகிவிடும். இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக, குடியரசுத் தலைவர் ஒரு இடைக்கால சபாநாயகரை நியமிப்பார். முன்னாள் மத்திய அமைச்சரும், 7 முறை பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான ராதா மோகன் சிங், சீனியாரிட்டி காரணமாக இந்த முறை இடைக்கால சபாநாயகர் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளது.  கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதையடுத்து ஜூன் 26ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. 17வது லோக்சபாவின் போது சபாநாயகராக பணியாற்றிய ஓம் பிர்லா இந்த பதவிக்கு முக்கிய வேட்பாளராக உள்ளார். 


தீவிரம் காட்டும் சந்திரபாபு நாயுடு:


சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் (டிடிபி) மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதா தளம் (யுனைடெட்) ஆகியவை சபாநாயகர் பதவியை கைப்பற்ற தீவிரம் காட்டுகின்றன. தங்களது எம்.பிக்கள் பாஜகவிற்கு தாவுவதை தடுக்க இந்த பதவியை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். GM ஹரிஷ் பாலயோகி மற்றும் பிற தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை சுற்றி வதந்திகள் பரவினாலும், அவர்களின் வேட்பாளர் குறித்து கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 


பாஜகவிற்கு சபாநாயகர் பதவியைப் பெறுவது மிகவும் முக்கியமானது. அவை 240 இடங்களைக் கொண்ட பலவீனமான பெரும்பான்மையை கொண்டிருக்கிறது.  NDA கூட்டணிக் கட்சிகளால் மொத்தம் 293 இடங்களை எட்டியது. நாடாளுமன்ற நெருக்கடிகளின் போது சபாநாயகர் முக்கியப் பங்காற்றுவதுடன், கட்சி தாவும் பட்சத்தில் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் அவருக்கு உள்ளது.


யாருக்கு சபாநாயகர் பதவி?


ஆந்திரப் பிரதேச பாஜக தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான டக்குபதி புரந்தேஸ்வரி, புதிய சாத்தியமான வேட்பாளராக கருதப்படுகிறார்.  ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமச்சரும், தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்.டி.ராமராவின் மகளான புரந்தேஸ்வரி, இதற்கு முன்பு 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ராஜமுந்திரியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


ஜூன் 26ஆம் தேதி புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதைத் தொடர்ந்து, ஜூன் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார்.  ஜூலை 3ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜூலை 22ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.