தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் இருக்கும் தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 


தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது. அதே சமயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 ஆம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அவரது கட்சி பெயரில் பிழை இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டது. கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். அதாவது தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 


இந்நிலையில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் சின்னம் மற்றும் கொடி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி அமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் தலைமை கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விஜயின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒருபக்கம் அவரை அரசியல் தலைவராக பார்க்கும் ஆசை இருந்தாலும் இனிமேல் அவரை நடிகராக திரையில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. தங்களது சிறு வயது முதல் பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை இனிமேல் மீண்டும் திரையில் பார்க்க முடியாதது அவர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில் விஜயின் 69-வது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.