சேலம் மாநகர் தாதகாபட்டி பகுதியில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளி மாணவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதியை முதலமைச்சராக வேண்டியதில்லை, உதயநிதி ஸ்டாலினை மக்களே முதல்வராக்குவார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் செயல் தலைவராக வருவதற்கு 46 ஆண்டுகாலம் காத்திருந்தவர்கள். நாடு எதிர்கொண்டிருக்கிற அபாயத்தை விளக்கிக் காட்டிய பின்னும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதள பாதாளத்திலிருந்து ஒருவராலும் காப்பாற்ற முடியாது. அதற்காகத்தான் "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தமிழகம் முழுவதும் நடத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். உதயசூரியன் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைப்பதற்கு உதாரணமாக சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.



திமுக அரசியல் ரீதியான பாதையில் ஏறுவதற்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதி சினிமாவிலும், அரசியலும் மிகப்பெரிய பாய்ச்சலை உருவாக்குவதற்கு அடித்தளம் பெற்றது சேலம்தான். 1957 ஆம் ஆண்டு திமுக மாமன்ற உறுப்பினர் சேலத்தில் இரும்பு தாதுகள் அதிகம் கிடைப்பதால் இரும்பு எஃகு தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கான உத்வேகத்தை கொடுத்த தீர்மானம் திமுகதான். ஐந்தாண்டுக்கான திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் முடித்துள்ளார் தமிழக முதல்வர். தமிழகத்தில் உரிமைகளை எந்த விதத்தில் மத்திய அரசு தட்டி பறிக்கிறது, என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்துள்ளது? அதைச் சொல்வதற்காகத்தான் வந்துள்ளேன். புள்ளி விவரங்களை கேட்க மக்களுக்கு சிறிது சோர்வு தரும். பொருளாதாரத்தில் ஒன்பது சதவிகிதத்தை தமிழகம் மத்திய அரசுக்கு தருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக கண்ணாகவும் கருத்தாக இருப்பது எப்பொழுதும் திமுகதான்.



தென் மாநிலங்களில் உரிமைகளை பறிப்பதற்காக தென் மாநிலங்களில் தொகுதிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று ஏமாற்றியவர்களை அடையாளம் காட்டுவதற்காக இந்திய கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின் உருவாக்கி தந்தார். இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து இந்திய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசை ஆளும் பாஜகவின் தோல்வி என்பது தமிழகத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கை காட்டுபவர்தான் பிரதமராக வருவார் அந்த வகையில் தமிழகத்தில் 40 தொகுதிகளையும் திமுக வென்று காட்டும், சமதர்ம சமுதாயத்தை உருவாக்கி, ஜனநாயகத்தை காத்திட, மாநில சுயாட்சியை பெற்றிட, மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும் அது இந்திய கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும் என்று கூறினார். மேலும் பாஜகவிற்கு முடிவு கட்டும் தேர்தலாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் அமையும் என்றும் பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமசந்திரன், திமுக மாவட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.