Chandigarh Mayor: சண்டிகர் மேயர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு:
கடந்த 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும், ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரியே வாக்குச் சீட்டுகளில் பேனாவை கொண்டு எதையோ கிறுக்குவதை போன்ற வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக உச்சநிதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
சண்டிகர் மேயர் ராஜினாமா..!
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கண்டித்தது. தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு இன்று (பிப்ரவரி 19) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான், மனோஜ் குமார் சோன்கர் சண்டிகர் மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேநேரம், ஆம் ஆத்மியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தது திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மையை பெற்ற பாஜக:
ஆம் ஆத்மியை சேர்ந்த பூனம் தேவி, நேஹா மற்றும் குர்சரண் கலா ஆகிய 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த முடிவு குறித்து பேசிய பூனம் தேவி, ஆம் ஆத்மி கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளித்து எங்களை ஏமாற்றிவிட்டது. அது ஒரு பொய்யான கட்சி. பிரதமர் மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டு நாங்கள் பாஜகவில் இணைந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார். 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனில் பாஜக 14 கவுன்சிலர்களை கொண்டிருந்த நிலையில், தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ஒரு சிரோமணி அகாலி தள கவுன்சிலரின் ஆதரவு உள்ளது. அதோடு, பாஜகவின் சண்டிகர் எம்பி கிர்ரோன் கெருக்கும் முன்னாள் அலுவலராக வாக்களிக்கும் உரிமை உள்ளது. இதன் மூலம் பாஜகவிற்கான ஆதரவு வாக்குகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், ஆம் ஆத்மிக்கு 10 கவுன்சிலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு 7 கவுன்சிலர்கள் என, அந்த கூட்டணிக்கு மொத்தமாக 17 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம், மறுதேர்தல் நடைபெற்றால் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.