காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் முக்கியமான தலைவர்களில் ஒருவருமானவர் ராகுல்காந்தி. பாரத் ஜோடா யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், ராகுல்காந்தி கன்னியாகுமரியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் பேசிய விவகாரம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் ராகுல்காந்தி மத போதகர் ஜார்ஜ் பொன்னையா உள்பட சிலரைச் சந்தித்து பேசினார. அப்போது, ராகுல்காந்தி அவர்களிடம் இயேசு கிறிஸ்து கடவுளின் உருவமா..? என்று ஆர்வமாக கேட்டார். அதற்கு அவரைச் சுற்றியிருந்த மதபோதகர்கள் அவருக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ஜார்ஜ் பொன்னையா அவர் இயேசு கிறிஸ்து கடவுளின் உருவம் கிடையாது. உண்மையான கடவுள். மனிதன், மனிதன் இணைந்து இயேசு பிறக்கவில்லை. மற்ற சக்திகளைப்போல இல்லை என்று அவர் கூறினார்.
ராகுல்காந்தி ஜார்ஜ் பொன்னையாவுடன் பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஜார்ஜ் பொன்னையா சக்தி என்று குறிப்பிட்டது இந்து மத கடவுள்களை குறிப்பது போல இருப்பதாக கூறி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய காரணத்திற்காக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. அமைச்சர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த கூட்டத்தில் அவர் பிரதமர், மத்திய அமைச்சர்கள் குறித்து பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பாதிரியார் ஜார்ன் பொன்னையாவுடன் ராகுல்காந்தி சந்தித்து பேசியதற்கும், ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்கும் பா.ஜ.க.வினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மாபெரும் நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த பயணத்தில் அவர் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார். காஷ்மிரில் நிறைவு செய்ய உள்ள இந்த நடைபயணத்தை ராகுல்காந்தி 48 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
bமேலும் படிக்க : நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசும், தமிழக ஆளுநருமே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்