அதிமுகவில் ஒ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் ஒரு பக்கம் நடந்து வருகிறது. மறுபுறம் அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன. எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய மூவர் இடையே அதிமுக தலைமைக்கான போட்டி நடக்கும் அதேவேளையில், அதிமுகவினரே பாஜகவிற்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது நாம் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை பார்க்கலாம் : -
கேள்வி : ஒரு மாதத்திற்கு மேலான திமுக ஆட்சியின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : ஒரு மாதம் என்பது மிகக் குறுகிய காலம். நூறு நாட்களை கடக்கும் போது தான் அரசு எந்த திசையில் செல்கிறது என்பதை கணிக்க முடியும். அதேசமயம் ஊராட்சிகளில் முரசொலி நாளிதழ் வாங்க உத்தரவிட்டது, குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளை முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வழங்கியது ஆகியவற்றை தவிர்த்து இருந்திருக்கலாம்.
கேள்வி : ஒபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடைபெறும் போஸ்டர் யுத்தத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடைபெறும் போஸ்டர் யுத்தம் இருவரது பதவி வெறி, சுயநலத்திற்காக நடக்கிறது. மற்ற தலைமை உருவாகாமல் இருப்பதற்கான போட்டி இது. இத்தகைய குழப்பங்கள் நடப்பது கட்சிக்கு நல்லதல்ல. இது அவர்களுக்கு தெரியாமல் நடந்ததா?. அப்படி நடந்திருந்தால் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு இருவரிடம் இருந்தும் அறிக்கை வராதது தவறான புரிதலை தருகிறது. போஸ்டர் யுத்தம் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை அவர்கள் இருவருக்கும் தெரியாமல் போஸ்டர் ஒட்டி குழப்பம் விளைவிக்க முயன்றிருந்தால், அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி : சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளிவருவது எதனை வெளிக்காட்டுகிறது?
பதில் : அதிமுக கட்சி நன்றாகவே உள்ளது. அதனால் சசிகலா அதிமுகவில் இணைந்து செயல்பட நினைக்கிறார். அவரை கட்சியில் சேர்ப்பது தவறல்ல. ஆனால் சசிகலா தொண்டராக இணையலாமே தவிர, தலைமை ஏற்கக்கூடாது.
கேள்வி : எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை விட, ஓ.பன்னீர் செல்வம் அதிக அறிக்கைகளை வெளியிடுவது ஏன்?
பதில் : ஒ.பன்னீர்செல்வம் தன்னை கட்சியில் முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். அதற்காக தான் இப்படி அறிக்கைகளை வெளியிடுகிறார். அதேசமயம் எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிக்க அதிக உரிமை உள்ளது. அவரின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேள்வி : அதிமுகவினரை பாஜகவிற்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. அதனை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : ஒரு கட்சியில் உள்ளவர்களை வேறொரு கட்சிக்கு இழுக்க முயல்வது எல்லா காலகட்டங்களிலும் நடப்பது தான். பாஜக தனது வாக்கு வங்கிக்காக, இரண்டாம் கட்ட தலைவர்களையும் இழுக்க முயற்சிக்கிறது. அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சிக்கிறது.
கேள்வி : அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை தொடருமா?, ஒற்றைத் தலைமைக்குள் வருமா?
பதில் : அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் ஆரம்பித்த கட்சியல்ல, எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி. அடிப்படை தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பது அவர் உருவாக்கிய விதி. அதனை கடைபிடிக்க வேண்டும். பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்து ஒற்றை தலைமைக்கு கீழ் பயணிப்பது தான் அதிமுக வலுமையாக இருக்க உதவும். இல்லையெனில் அதிகார போட்டி காரணமாக மாவட்டங்கள் முழுக்க கோஷ்டி பூசல் உருவாகும். பொதுச்செயலாளர் என்பவர் அனைவரையும் அரவணைத்துச் செல்பவராக இருக்க வேண்டும். பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால் நானும் கண்டிப்பாக போட்டியிடுவேன்.
கேள்வி : திமுக அரசு மீது எதிர்கட்சியாக அதிமுக ஏன் பெரியளவில் விமர்சனங்களை வைப்பதில்லை?
பதில் : திமுக அரசை கண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுகிறார்கள். ஊழல் புகார்களில் கைது செய்யப்படுவோம் என்ற பயம் காரணமாக விமர்சிப்பதில்லை.