திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் கார் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் என்னுடையது இல்லை என்றும் காவல் துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.


கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்ரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லபட்ட ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ், பெருமாள், நவீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரிந்தவர் என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பியது தாம்பரம் காவல் நிலையம். 


நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க பத்து நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாம்பரம் காவல்துறை அலுவலகம் சார்பில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மே-2ம் தேதி ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.


 தியாகராயர் நகர் பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பேசுகையில், ” மே-2 ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்திற்கு நேரில் வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இது என்னை முழுக்க முழுக்க டார்கெட் செய்யப்பட்டதாகும். இதை அரசியல் சூழ்ச்சி என்றுதான் சொல்வேன். உங்களுக்கே தெரியும். தழிழ்நாட்டில் இதுவரை எத்தனை கோடி ரூபாய் பிடித்திருக்கிறார்கள். இதுவரை 200 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்திருக்கிறார்கள். யாரோ ரூ.4 கோடி பணம் வைத்திருந்ததற்காக என் பெயரையும் சேர்த்துள்ளனர். 200 ரூபாய் கோடி பணம் பறிமுதல் செய்திருக்கிறார்கள். விவசாயிகள், வியாபாரிகள் தொழிலுக்கு வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்தப் பணம் என்னுடையது இல்லை. எனக்கும் பிடிக்கப்பட்ட பணத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. அதோடு, யாரோ ஒருவர் என்னுடைய பெயரை பயன்படுத்தியதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். கைது செய்யப்பட்டவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள்தான். ஆனால் பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. காவல்துறையினர் மிரட்டி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கலாம். எனக்கு நிறைய பேரை தெரியும். காவல் துறையினர் அவர்கள் கடமையை செய்கின்றனர். நான் முழு ஒத்துழைப்பை தருவேன். சம்மனுக்கு ஆஜாராகுவேன். இதில் யார் மீது நான் குற்றம் சொல்வது?” என்று தெரிவித்துள்ளார்.