Inheritance Tax: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெற உள்ளது.


வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் திட்டமா?


இப்படிப்பட்ட சூழலில் நாளுக்கு நாள் அரசியல் சர்ச்சை வெடித்த வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்து கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்து கருத்து பெரும் விவாத பொருளாக மாறியள்ளது.


வாரிசுரிமை வரி குறித்து பேசிய சாம் பிட்ரோடா, "அமெரிக்காவில் வாரிசுரிமை வரி என ஒன்று உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும் போது தன்னுடைய குழந்தைகளுக்கு 45 சதவீத சொத்து மட்டுமே அளிக்க முடியும். 55 சதவீதம் அரசாங்கத்தால் கைப்பற்றப்படுகிறது.


இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். உங்கள் தலைமுறையில் நீங்கள் செல்வம் சம்பாதித்தீர்கள். இப்போது நீங்கள் மரணம் அடைகிறீர்கள் என்றால், உங்கள் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும். அது அனைத்தையும் அல்ல. அதில் பாதி. இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது" என்றார்.


பரபரப்பை கிளப்பும் பிரதமர் மோடி: 


ஆனால், இதைத்திரித்து பேசிய பிரதமர் மோடி, "பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குச் செல்லும் பரம்பரைச் சொத்துக்களுக்கு வரி விதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன" என்றார். சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரச குடும்பத்தின் இளவரசரின் ஆலோசகர் முன்பு கூறியிருந்தார்.


இப்போது இன்னும் மேலே சென்றுவிட்டனர். இப்போது காங்கிரஸ் பரம்பரை வரி விதிப்பதாகவும், பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் பெறும் பரம்பரைக்கு வரி விதிக்கப் போவதாகவும் கூறுகிறது. உங்கள் கடின உழைப்பால் நீங்கள் குவிக்கும் செல்வம் உங்கள் பிள்ளைகளுக்குச் சென்று சேராது.


அதை காங்கிரஸின் கை பறிக்கும். 'உங்கள் வாழ்நாள் முழுவதும் கொள்ளையடிப்போம். உங்கள் மரணத்திற்குப் பின்பும் கொள்ளையடிப்போம்' என்பதே காங்கிரஸின் தாரக மந்திரம். நீங்கள் வாழும் வரை, காங்கிரஸின் அதிக வரி விதிப்பு உங்களைத் துன்புறுத்தும். நீங்கள் இறந்த பிறகும், அவர்கள் விதிக்கும் பரம்பரை வரி உங்களுக்கு சுமையாக அமையும்" என்றார்.


உண்மை என்ன?


அமெரிக்காவில் உள்ள வாரிசுரிமை வரி குறித்து மட்டுமே காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா கூறியிருந்தார். ஆனால், வாரிசுரிமை வரியை அமல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் வாரிசுரிமை வரி ஒன்றும் இந்தியாவுக்கு புதிது அல்ல. பண்ணை வரி அல்லது இறப்பு வரி என்ற பெயரில் இந்தியாவில் 1985ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அமலில் இருந்திருக்கிறது. கடந்த 1985ஆம் ஆண்டு, பண்ணை வரியானது பிரதமர் ராஜீவ் காந்தியால் ரத்து செய்யப்பட்டது.


தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "சொத்துரிமை வரியை வதிக்க காங்கிரஸிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை நான் திட்டவட்டமாக கூற விரும்புகிறேன். (சாம்) பிட்ரோடா மிகவும் புகழ்பெற்ற தொழில்முறை வல்லுநர்.


இந்தியாவின் வளர்ச்சிக்கு பல பங்களிப்புகளை செய்துள்ளார். தனக்கு எது நன்கு தெரியும் என உணர்ந்திருக்கிறாரோ அதை பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்க சூழலில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த கருத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் காங்கிரஸ் சார்பில் பேசவில்லை" என்றார்.