நிர்மலா குறித்த பதிவால் காங்கிரஸ் சங்கடம்? திடீரென ராகுல் சந்திப்பை பதிவிட்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

நேற்று குடும்ப வரலாறு என்று குறிப்பிட்டு நிர்மலா சீதாராமனுடன் உரையாடிய பதிவை வெளியிட்ட நிதி அமைச்சர், திடீரென ராகுலுடன் நெடிய வரலாறு குறித்து பேசிய பதிவை பதிவிட காரணம் என்ன?

Continues below advertisement

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சில மாதங்கள், அதிக கருத்து தெரிவித்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அதன் பின் சில சர்சைகளால் கருத்து தெரிவிப்பதை குறைத்துக் கொண்டார். அது தலைமையின் உத்தரவு என்றும் கிசுகிசுக்கப்பட்டது. குறிப்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்பான கருத்துக்களும், விளக்கங்களும் தவிர்க்கப்பட்டன.

Continues below advertisement

இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகி, அனைத்திலும் திமுக கூட்டணயிில் உள்ள காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி, தமிழ்நாட்டில் திமுக கூட்டணயில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக அமையலாம் என்கிற கருத்து நிலவி வந்ததது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அதிகாரத்தை பிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள மாநில கட்சிகள் சில கருதின. அவர்கள் மாற்று முடிவு எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், நேற்று இரவு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டார். கடந்த மாதம் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்த பதிவு அது. ‛இப்போது எதற்கு கடந்த மாத பதிவை நிதி அமைச்சர் போடுகிறார்...’ என்கிற குழப்பம் பலருக்கும் இருந்தது. போதாக்குறைக்கு அதிலிருந்த வாசகங்களும் சந்தேகத்தை வலுப்படுத்தின. 

‛‛கடந்த மாத இறுதியில் டெல்லி சென்றிருந்த எங்களுக்கு அன்பான வரவேற்பளித்த மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி. வழக்கமாக தமிழ்நாட்டிற்கு வழங்கும் வழிகாட்டுதல் & ஆதரவோடு இம்முறை மதுரை & மீனாட்சி அம்மன் கோயில் உடனான சில பொதுவான குடும்ப வரலாறு குறித்து அவர் விளக்கினார்’’

இந்த பதிவு தான், கொஞ்சம் சிந்திக்க வைக்கும் பதிவாக இருந்தது. தமிழ்நாட்டிற்கு வழிகாட்டுதலும், ஆதரவும் தரும் என்கிற வார்த்தை, பாஜக மீதான திமுகவின் முந்தைய கால குற்றச்சாட்டுகளை அப்படியே அழித்ததைப் போன்று இருந்தது. இது யாரும் சற்றும் எதிர்பாராத பதிவு என்பதால், எதிர்பார்ப்பு எகிறியது. உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு, இந்த பதிவு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. திமுக... பாஜக பக்கம் சாய்கிறதோ... என்கிற சந்தேகமும் அவர்களுக்கு வலுத்தது. இது திமுக தலைமை வரை எதிரொலித்ததாகவே தெரிகிறது. அதன் எதிரொலி.... சற்று முன் அதே பழனிவேல் தியாகராஜன், தனது பேஸ்புக் பதிவில், மற்றொரு பதிவை பதிவிட்டுள்ளார். அதுவும் கடந்த மாத சந்திப்பு குறித்த பதிவு தான். இம்முறை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உடனான சந்திப்பு. 

‛‛கடந்த மாதம் டெல்லி சென்றபோது திரு ராகுல்காந்தி அவர்களுடன் நடைபெற்ற உரையாடல் புதிய புரிதலை ஏற்படுத்துவதாக அமைந்தது, ஏனெனில் பொதுவாக என் உடனடி கவனத்தில் இல்லாத நெடிய வரலாறு கொண்ட தேசிய பிரச்சனைகள் குறித்து உரையாடல் நீண்டது.
எதிர்பாராத இச்சந்திப்பை ஏற்பாடு செய்த பிரவீன் சக்கரவர்த்தி நன்றி’’
என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 
 
நேற்று குடும்ப வரலாறு என்று குறிப்பிட்டு நிர்மலா சீதாராமனுடன் உரையாடிய பதிவை வெளியிட்ட நிதி அமைச்சர், திடீரென ராகுலுடன் நெடிய வரலாறு குறித்து பேசிய பதிவை பதிவிட காரணம் என்ன? என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. காங்கிரஸ் கட்சியை சமரசம் செய்யும் விதமாகவே இந்த பதிவு போடப்பட்டிருக்கலாம் என்கிறார்கள், இந்த பிரச்சனையை நன்கு அறிந்த சிலர்!
 
Continues below advertisement
Sponsored Links by Taboola