தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சராக பணியாற்றி வருபவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். குறுகிய காலத்திலே அதிரடி பேச்சுகளால்  சமூக வலைதளங்களில் வைரலாகி பிரபலமானவர். எதையும் வெளிப்படையாக பேசுபவரான பி.டி.ஆருடன், சமீபத்தில் மூத்த பத்திரிக்கையாளர் சமஸ் செய்த உரையாடலில் மதுரையை பற்றியும், மதுரயோடு தனக்கு உள்ள தொடர்பை பற்றியும், மனைவி, மக்கள் பற்றியும் இயல்பான பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.


கடவுள் நம்பிக்கையோடு சமூக நீதி பேசுவது முரணாக இல்லையா என்று கேட்ட கேள்விக்கு, "நீதிக்கட்சியில் இருந்தவர்தான் என் தாத்தாவும், அப்பாவும்… கோயில்களை தேசியமயமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நீதிக்கட்சிதான். கோயில்களை வெறுப்பவர்கள், கடவுள் மறுப்பாளர்கள் ஏன் கோயிலை முன்னேற்ற, பாதுகாக்க முன்னெடுப்பு எடுக்க வேண்டும். எக்கேடோ கெட்டு போகட்டும் என்று விடலாமே. பெரியார் சொல்கிறார், பெண்களை சமமாக மதிக்கின்ற… ஒருவனை இங்கேயே நில், ஒருவன் பாதி தூரம் உள்ளே வா, இன்னொருவன் உள்ளே வந்து தொழு என்று நிர்ணயிக்காத… ஒரு வேலை நடக்க வேண்டும் என்பதற்காக காணிக்கை கேட்காத… நான் பேசுவதற்கு இடையில் தரகர் போன்ற எவரையும் வைக்காத கடவுள் இருக்கிறார் என்றால், அவரை நானே தொழுவேன் என்றார். அடுத்தது அண்ணா, நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன் என்றார். அதனால இது முரண் அல்லவே அல்ல. நம்பிக்கை கொள்வது தனிப்பட்ட விருப்பமாகத்தான் பார்க்கிறோம் நாங்கள்." என்றார்.



மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் சாதி இருப்பது கண்கூடாக தெரிவதற்கு என்ன காரணம், அதற்கு என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு, "ஒரு இடத்திற்கு அதிக மக்கள் கூடினால், அங்கு வேறுபாடு இரண்டாம் பட்சம் ஆகிப்போகும். பின்னர் காலப்போக்கில் அது இல்லாமலே போகும். ஏனென்றால் அதிக மக்கள் கூடும் இடத்தில் எல்லோருமே ஒரே மாதிரி மக்களாக இருக்கப்போவதில்லை. அப்படி கூட வைப்பதற்கு வளர்ச்சி முக்கியம். தொழில்துறை வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி செய்தால் அதிக மக்கள் ஒரு இடத்தில் கூடுவார்கள். அதற்கான வேலைகளை மாண்புமிகு தமிழக முதளமைச்சருடன் இணைந்து நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.


மதுரையில் சிப்காட் தொழிற்சாலை, தொழில்நுட்ப பூங்கா போன்றவை உருவாக்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பாதாள சாக்கடை திட்டம் போன்றவை மூலம் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகிய வேலைகள் நடக்கின்றன. அதன்மூலம் மக்கள் அதிக அளவில் கூட கூட வேறுபாடுகள் இரண்டாம் பட்சம் ஆகிப்போகும்.


மகன்களுக்கும் மனைவிக்கும் வைத்த பெயர் பற்றி ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். "நான் ரசித்த நான் வாழ்ந்த மதுரை அவருக்கும் இயற்கையாகவே பிடித்துவிட்டது. நான் சிறுவயதில் சாப்பிட்ட பரோட்டா கடையில் அமர்ந்து பரோட்டா சாப்பிடுவது, நான் ரசித்த இடங்களை ரசிப்பது என அனைத்தும் என் மனைவிக்கும் பிடித்தது. இயற்கையிலேயே அவருக்கும் மதுரைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது போன்ற உணர்வு. அவரே கேட்டார், நான் இந்து மதத்திற்கு மாறிக்கொள்கிறேன் என்று, பிறகு அவரே அவருக்கு பிடித்த பெயரை வைத்துக்கொள்ளட்டும் என்று சொன்னோம். அவர் மீனாட்சி என்று வைத்துக்கொண்டார்.


அப்படித்தான் மதுரை மீனாட்சி ஆனார். மகனுக்கு பெயர் வைக்கும்போது பேரன் என்றால் மூதாதையரின் பெயரை கொண்டவன் என்பது பொருள் என்பதால், அவனுக்கு பழனி என்று வைத்தோம். இரண்டாவது குழந்தைக்கு மனைவியின் மூதாதையர் பெயரை வைக்கலாம் என்று கேட்டபோது, அவர் நாங்கள் ஆஸ்திரியா, அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வாழ்ந்தவர்கள். எங்களுக்கு அப்படிப்பட்ட மரபெல்லாம் இல்லை. உங்கள் வழியிலேயே பெயர் வையுங்கள் என்றார். அதுமட்டுமின்றி மகனும் வளர்ந்த பிறகு எனக்கு மட்டும் ஏன் தாத்தாவின் பெயர் வைக்கவில்லை என்று கோபித்துக்கொள்வான் என்று வேல் என்று வைத்துவிட்டோம்" என்றார்.



மதுரைக்கு தூங்கா நகரம் என்று ஒரு பெயர் உள்ளது. அதனால் பழனிவேல் தியாகராஜனின் இரவு மதுரை என்ன என்று கேட்டபோது, "நான் 5 வயதுக்கு பிறகு பெரிதாக மதுரையில் இல்லை. அப்பா இறந்த பிறகுதான் மதுரை வந்தேன். ஆனாலும் நான் சிறுவயதில் இரவு 3 மணிக்கு மில் தொழிலாளர்கள் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு செல்லும்போது சாப்பிடுவதற்காக திறந்திருந்த கடையில் அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால் அதனை திரும்பி வந்து கண்டுபிடிப்பது பெரும் பாடாக இருந்தது.


கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆயிற்று. அப்போதெல்லாம் அதனை புரோட்டா கடை புரோட்டா கடை என்று கூறுவோம். பிறகு தேடியபோதுதான் சொன்னார்கள், அதற்கு பெயர் திராவிட உணவகம் என்று. அதற்கு ஏன் அந்த பெயர் என்றால், அண்ணாவும், கலைஞரும், மேயர் முத்துவும் அமர்ந்து சாப்பிட்ட கடை அது. மதுரையில் என் இரவு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது அந்த கடை" என்று கூறினார்.