நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் வெற்றி பெற்றதால் இருவரும் வகித்து வந்த ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். முன்னதாக அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த முகமது ஜானும் மாரடைப்பால் காலமாகி இருந்தார். தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பது விதி. காலியாக உள்ள இடங்களுக்கு உடனடியாக இடைத்தேர்தலை நடத்தக் கோரி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோர் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்திருந்தனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று இடங்களுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அம்மனுவில் கேட்டிருந்தனர். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் ஜூலை மாதத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலியாக உள்ள 3 பதவிகளையும் திமுகவே கைப்பற்றும் அளவிற்கான எம்.எல்.ஏக்கள் பலத்தை பெற்றுள்ளதால் எம்.பி பதவிக்கு வாய்ப்பு கோரி 300க்கும் மேற்பட்டோர் தலைமையை அணுகியுள்ளனர். இது போதாதென்று காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்தும் தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு திமுக தலைமையை அணுகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேனியில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கடுமையான போட்டியை கொடுத்து வெற்றி வாய்ப்பை இழந்த தங்கத் தமிழ்ச்செல்வன், தொண்டாமுத்தூரில் வேலுமணியிடம் தோல்வி அடைந்த கார்த்திகேய சிவசேனாபதி, பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் உள்ளிட்ட 3 பேருக்கு இந்த முறை ராஜ்யசபாவிற்கு செல்ல வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் திமுக துணைப்பொதுச்செயலாளரும் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவியருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் ஆவுடையப்பன், ஆஸ்டீன், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் சல்மா, அப்துல்லா மற்றும் திமுகவில் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாதவர்கள் மற்றும் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடக்காத மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 300 பேருக்கும் அதிகமானோர் தலைமையிடம் வாய்ப்பு கேட்டுள்ளனர்.
வெயிட்டிங் லிஸ்டில் காங்கிரஸ்
இதுபோதாதென்று காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் புள்ளிவிவர பகுப்பாய்வு பிரிவு தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் திமுக தலைமையிடம் அணுகி ராஜ்யசபா வாய்ப்பை கேட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்று கூறி திமுக அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் அதிமுக எம்.பி.,க்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக எம்.பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரின் பதவிக்காலமும் நிறைவடைய உள்ளது. இந்த முறை வாய்ப்பு வழங்க முடியாத திமுக நிர்வாகிகள் பலருக்கும் அடுத்தாண்டில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களை காட்டி வாய்ப்பு வழங்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.