முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ள நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புகளை யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. துணை முதல்வர் பொறுப்பு யாருக்கு என்பது ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், ஆட்சி நிர்வாகத்தின் தற்காலிக தலைமையாக யார் செயல்படப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.


யார் பொறுப்பு முதல்வர் உதயநிதியா ? இல்லை துரைமுருகனா?


மாநில முதல்வர்கள் அலுவல் பயணமாக வெளிநாடு சென்றாலோ அல்லது அவர்கள் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டாலோ ஆட்சியை வழிநடத்துவதற்கு இவர்தான் என்று ஒருவரை நியமனம் செய்வர். ஆனால், கடந்த 2022ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு துபாய், அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றபோது அப்படி யாரையும் பொறுப்பு முதல்வர் என அறிவிக்கவில்லை. ஆனால், அவரது பொறுப்புகளை அவருடைய தனிச் செயலாளர்கள் எடுத்துச் செய்தனர்.


இந்நிலையில், தற்போது மீண்டும் அமெரிக்க சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புகளை அவரது தனிச் செயலர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரை முன்நின்று எடுத்துச் செய்வார்களா ? அல்லது அவரது மகனும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி அல்லது மூத்த அமைச்சர் துரைமுருகன் முதல்வரின் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு அவர் வரும் வரை செயல்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஏனென்றால், முதல்வர் வெளிநாட்டு பயணம் தொடர்பான அறிவிப்பு வந்த நாள் முதலே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவார் என்ற செய்திகள் கச்சைக் கட்டி பறந்தன, ஒரு கட்டத்திற்கு பிறகு இரண்டு துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்படவிருக்கின்றனர். அதில் ஒருவர் முத்த அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் என்றும் பேசப்பட்டது. ஆனால், முதல்வர் வெளிநாடு சென்றவிட்ட நிலையில், அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை.


உதயநிதி வசமே தமிழ்நாடு அரசு – அதிகாரப்பூர்வமற்ற நிலையில் பொறுப்புகளை கவனிப்பதாக தகவல்


இந்நிலையில், முதல்வரிடம் இருந்த சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, அமைச்சராக்கப்பட்ட உதயநிதிக்கு கொடுக்கப்பட்டபோதே அவர் விரைவில் துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்று பேசப்பட்டது. அதோடு, அமைச்சர் அன்பில் மகேஷூம் தனது பங்கிற்கு இதனை பேசி உறுதிப்படுத்தினார். இப்போது, முதல்வர் தமிழ்நாட்டில் இல்லாத சூழலில் அவரின் பொறுப்புகளையும் கூடுதலாக ஏற்று உதயநிதி ஸ்டாலினே ஆட்சியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.


முதல்வரிடம் தினமும் ஆலோசனை செய்யத் திட்டம்


முதல்வர் அமெரிக்காவிற்கு சென்றாலும் அவரிடம் நேரடியாக தொலைபேசி, வீடியோ மூலமாக அன்றாக தமிழக அரசின் நடவடிக்கைகள், முடிவுகளை கலந்தாலோசித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி உதயநிதி ஸ்டாலின் இந்த 17 நாட்களும் செயல்படவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது


உதயநிதிக்கு உதவும் அரசின் முக்கிய அதிகாரிகள் - மூத்த அமைச்சர்கள்


முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாடு திரும்பும் வரை சட்ட ஒழுங்கு உள்பட அனைத்து நிர்வாக விவகாரங்களையும் உதயநிதி ஸ்டாலினே கவனிக்கவுள்ளதாக கூறப்படும் சூழலில் அவருக்கு நிர்வாகத்தில் உதவ முதல்வரின் செயலர்களாக உள்ள சண்முகம், அனு ஜார்ஜ், தலைமைச் செயலாளர் முருகானாந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் துரைமுருகன், கே.என்.நேரு. ஏ.வ.வேலு உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் உதவியாக இருக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும் உதயநிதியே முதல்வர் என பேசும் திமுக தொண்டர்கள்


முதல்வர் பட ஒருநாள் முதல்வர் மாதிரி முதல்வர் வெளிநாட்டில் இருக்கும் இந்த 17 நாட்களும் உதயநிதியே முதல்வராக செயல்படவுள்ளார் என்று திமுக தொண்டர்கள் பேசிவருகின்றனர். அவர் வரும் வரை ஆட்சியை எந்த பிரச்னையும் இன்றி அவர் சிறப்பாக நடத்திக்காட்டுவார் என்றும் முதல்வர் வந்த பிறகு உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு தரப்படுவது உறுதி என்கிறது அறிவாலய வட்டாரம்.