தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (24.12.2022) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற கலைஞர் மு. கருணாநிதி வரலாறு மற்றும் திராவிடமும் சமூக மாற்றமும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர்,
“தமிழ்நாட்டுக்கும் - தமிழினத்துக்கும் தேவையான மாபெரும் அறிவுக் கருவூலமான இரண்டு புத்தகங்களை நான் வெளியிட்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் நானும் உங்களோடு பங்கேற்று புத்தகங்களை வெளியிட்டு அதே நேரத்தில் வாழ்த்தக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமைப்படுகிறேன்,
”போர்வாட்கள்”
இந்த இரண்டு புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இன்று இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது. இவை 'அறிவுக் கருவூலங்கள்' என்றுதான் நாம் சொல்ல வேண்டும்! இவை தமிழினத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய, திராவிட இயக்கத்திற்குக் கிடைத்திருக்கக்கூடிய கொடைகள் மட்டுமல்ல, 'போர்வாட்கள்' என்றுதான் நாம் சொல்ல வேண்டும்!
யார் அறிவாளி என்பதற்கு இந்திய அறிவுலக மேதையான புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், "எவர் ஒருவரின் அறிவு, அவர் வாழும் சமுதாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்தான் உண்மையான அறிவாளி!" என்று சொல்லி இருக்கிறார்.
அந்த வகையில் பார்த்தால், தங்களது அறிவையும், ஆற்றலையும், சிந்தனைத் திறனையும் இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள்தான் நம்முடைய பன்னீர்செல்வன் அவர்களும், திரு. ஜெயரஞ்சன் அவர்களும்!
'எதையும் தாங்கும் இதயம்
'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது' என்று பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகத்தைக் காட்டி, "எனக்கும் இங்கேதான் உறங்க வேண்டும்" எனக் கலைஞர் அவர்கள் மிக உணர்ச்சிவயமாகச் சொல்லும் பகுதி இந்த நூலில் வருகிறது. அதைப் படிக்கும்போது தலைவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு, அவர் விரும்பிய இடத்தைப் பெற்றுத் தர நடத்திய போராட்டம் இன்றைக்கும் என்னுடைய கண்முன் வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கியும், அதிகப்படியான பொதுவிநியோகக் கடைகளைத் திறந்தும் - கலைஞர் உருவாக்கிக் கொடுத்த திட்டங்கள் சமூகமாற்றத்துக்கு வழிவகுத்ததை ஆதாரங்களுடன் ஜெயரஞ்சன் அவர்கள் இதிலே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதேநேரத்தில் நாம் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்பதையும் ஜெயரஞ்சன் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
”மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியதல்ல”
''சமூகச் சீர்திருத்தத்தை முன்வைத்துப் போராடிய பெரியார் வழிவந்த அரசியல் கட்சிகள் பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆண்டாலும் தீண்டாமை நீடிக்கவே செய்தது" என்று தனது நூலில் 77-ஆவது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
அந்த ஆயிரம் ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியதல்ல. அதனை நாமும் அறியாதவர்கள் அல்ல. மாற்றத்தை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம்.
அதனால்தான், சாதியின் பேரால் தொடக்கூடாது - கண்ணில் படக்கூடாது – தெருவில், கோயிலில் நுழையக் கூடாது என்பதெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன.
கல்வியும் படிப்பும், வேலையும் பதவியும் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் லகானைக் கொடுத்துவிட்டது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தியுள்ள மாற்றம்!
கல்வி, வேலைகள், அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என பலவும் ஜனநாயக மயமானது. இந்த முன்னோக்கிய பாய்ச்சலில்தான் சமூகம் ஜனநாயக மயமாக வேண்டும்.
நமது திராவிட மாடல் கொள்கையில் அதனைத்தான் சொல்லி இருக்கிறோம். கல்வியில், தொழிலில், உள்கட்டமைப்பில், சிந்தனையில் மட்டுமல்ல, சமூகத்திலும் சேர்த்து வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி என்று சொல்லி இருக்கிறோம்.
திராவிட மாடல்:
''கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பற்ற அரசியலுக்கும் இனி ஆற்றல் அற்றுப் போகும்" என்று 1991-ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ.இராமசாமி சொன்னதாக பன்னீர்செல்வன் எழுதி இருக்கிறார்.
கலைஞர் பாணி சமூகநீதிக்கும் - மதச்சார்பின்மைக்கும் -சுயமரியாதைக்கும்- மாநில சுயாட்சிக்கும்- மொழி இன உரிமைக்கும் ஆற்றல் என்றும் அற்றுப் போகாது என்பதன் அடையாளம்தான் இன்றைய திராவிட மாடல் ஆட்சி!
சுயமரியாதை - சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம். அதே நேரத்தில் என்னுடைய அன்பான வேண்டுகோளாக, தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்திலும் - ஆங்கிலப் புத்தகங்களை தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். அதுதான் உங்களுக்கு இருக்கக்கூடிய பெரும் கடமை. எனவே, இந்த நூல் வெளியீட்டு விழா என்பது உங்களது அறிவிப் பணியினுடைய தொடக்கக் காலம்தான்” என்றார்.