காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் ராகுல் காந்தி பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமை நடைபயணம் ( பாரத் ஜோடோ யாத்திரை) என்ற பெயரில் தமிழ்நாடு தொடங்கி காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரத்தை 150 நாட்களில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளார்.


டெல்லி:


இந்நிலையில், இன்று ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலத்துக்குள் யாத்திரை நுழைந்தது. இந்த யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 




அப்போது பேசிய ராகுல் காந்தி, இந்த பாதயாத்திரையானது இந்தியாவை போன்றது. இங்கு வன்முறைக்கு இடமே கிடையாது.


இந்த யாத்திரையில் எந்த அசம்பாவித சம்பவங்களும்  நடைபெறவில்லை, ஆனால் சிலர், யாத்திரை குறித்து தவறான தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்


பிரச்னைகள் மறைக்கப்படுகிறது:


நாய், மாடு, பன்றி உள்ளிட்ட விலங்குகளும் பங்கேற்றன. ஆனால் யாரும், தொந்தரவு அளிக்கவில்லை. 


இன்று இருக்கும் பிரச்னைகள் யாவும், இந்து - முஸ்லிம் இடையேயான பிரிவினையை தூண்டி மறைக்கப்படுகின்றன. பட்டம் படித்த இளைஞர்கள், வேலையின்றி பக்கோடா விற்பனை செய்கின்றனர்.


இன்று நடப்பது மோதி அரசு இல்லை, அதானி மற்றும் அம்பானியின் அரசு. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பணம், விமான நிலையம், துறைமுகங்கள் எல்லாம் அவர்களுக்கு செல்கின்றன. என்னை பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்துவதற்காக, பல ஆயிரம் கோடிகளை பாஜக செலவு செய்கிறது. 


பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, யாத்திரையை பார்த்து பாஜக பயப்படுகிறது.  கொரோனா தொற்றை காரணம்காட்டி, யாத்திரையை நிறுத்த பார்க்கிறது என தெரிவித்தார். 


இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள்




இந்நிகழ்வில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது, நான் ஒரு கட்சி தலைவர் என்பதால், யாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என சிலர் தெரிவித்தனர். ஆனால், இந்திய குடிமகன் என்பதன் அடிப்படையில் யாத்திரையில் பங்கேற்றுள்ளேன்.


இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் இணைந்து நடக்கும் யாத்திரை. இவர் நேருவின் கொள்ளுப்பேரன், நான் காந்தியின் கொள்ளுப்பேரன்.


எந்த கட்சி ஆள்கிறது என்பது பற்றி எனக்கு கவலையில்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். நான் அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது, எனக்காக அல்ல" என்று தெரிவித்தார்.


முதல்கட்ட யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது என்றும், அடுத்த மாதம் ஜனவரி 3ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.