மயிலாடுதுறையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பேசுகையில், “பாஜகவை வீழ்த்தக்கூடிய மாபெரும் சக்தியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். திராவிட மாடல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார். கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற 5 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மற்றும் கொரோனா தொற்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளுடன் ஆட்சி பொறுப்பேற்று தற்போது சிறந்த ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். 




சட்டப்பேரவை தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண உள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நாதல்படுகை, முதலைமேடு உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை தமிழக முதல்வர் தீவிரமாக கண்காணித்து வருகிறார். 13 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் திமுகவில் இணைய ஆர்வமாக உள்ளவர்களை கட்சியில் இணைக்க வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராலிங்கம், திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.




வடகிழக்கு பருவமழையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுகூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன்.பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




கடந்த இரண்டு மாதங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரி நீரால் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் 7 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போர்கால அடிப்படையில் செய்த அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்து அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், “வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, கட்டுப்பாட்டு அறை பொது தொலைபேசி எண் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. பாதிப்பை மீட்டெடுக்கவும், நோய் தடுப்பு பணியை மேற்கொள்ளவும், மின்பழுதை போக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் எந்தெந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என்றார்.