முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் மொத்த 33 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அவர்களில் சிலரின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தி அளிக்காத நிலையில், அவர்களிடமிருந்து அமைச்சர் பதவியை பறித்து, வாய்ப்புக்காக காத்திருக்கும் மற்ற எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் நடைபெறும் என்றும், சரியாக செயல்படாத அமைச்சர்களின் பட்டியல் சித்தரஞ்சன் சாலையில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையால் அதிருப்தியில் உள்ள ஒரு சில அமைச்சர்களுக்கு வேறு துறையும் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.


 யார் யாரெல்லாம் மாற்றப்பட வாய்ப்பு ?



  • அமைச்சராக பதவியேற்றது முதல் இதுநாள் வரை தனது துறை சார்ந்த பணிகளை சரியாக கவனிக்காமல், தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இரு அமைச்சர்கள்



  • ஊழலற்ற நிர்வாகத்தை தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் அறிவுறுத்திய நிலையில், ஊழலுக்கு வழி வகுக்கும் செயல்களில் ஈடுபடுவதாக புகாருக்கு உள்ளாகியிருக்கும் ஒரு அமைச்சர்



  • அரசியல் நாகரிகத்தை தாண்டி, அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயல்படும் 2 அமைச்சர்கள்



  • தனது துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரிடமும் துடுக்குத் தனமாக தூக்கியெறிந்து பேசி ‘சண்டமாருதம்’ செய்த ஓர் அமைச்சர்.



  • நாவை நர்த்தனமாடவிட்டு, நாலு பேர் விமர்சிக்கும் வகையில் ’செயல்பட்ட' ஓர் அமைச்சர்


என மொத்தம் 7 அமைச்சர்களிடமிருந்து பதவி பதவி பறிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


 இலாக்காக்களும் மாற்றப்படுகிறது


சரியாக செயல்படாத அமைச்சர்களிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்பார்த்த துறை கிடைக்காத வருத்தத்தில் இருக்கும் சில அமைச்சர்ளுக்கு கூடுதல் பொறுப்பாக சில துறைகளை கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்


குறிப்பாக, கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்து, தற்போது செய்தித்துறை அமைச்சராக இருக்கும் வெள்ளகோயில் சாமிநாதன், அதேபோல், 2006-11ஆம் ஆண்டு காலத்தில் வருவாய்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் இருக்கும் ஐ.பெரியசாமி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை குறித்து கடுமையான வருத்தத்தில் இருப்பதாகவும், தங்களது அதிருப்தியை தலைமைக்கு தெரியப்படுத்திய நிலையில், இவர்கள் இருவருக்கும் வேறு சில துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.



அமைச்சர் ஐ.பெரியசாமி


 புதிய அமைச்சர்கள் யார்..?


சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்கள் பதவி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படவில்லையென்ற குறை அமைச்சரவை பதவியேற்ற நாளில் இருந்து தொடர்கிறது. குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி தரப்படவில்லை. தஞ்சையில் உள்ள 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. அதேபோல், திருவாரூரில் உள்ள 4 தொகுதிகளில் மூன்று தொகுதிகளையும், நாகை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளையும் திமுக வென்றுள்ளது.



திருவாரூர் எம்.எல்.ஏ.பூண்டி கலைவாணன்


இந்நிலையில், டெல்டா மாவட்டத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட திமுக செயலரும் எம்.எல்.ஏவுமான பூண்டி கலைவாணன் அல்லது மன்னார்குடியில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா ஆகிய இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பை தர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


 



மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா


அதேபோல், தருமபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி தனி மாவட்டமாக பிரிந்து 17ஆண்டுகளாக ஆகியும் திமுகவை சேர்ந்த எவரும் திமுக ஆட்சியில் அமைச்சராக இடம்பெற்றது இல்லை.   2006 தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஒரு திமுக எம்.எல்.ஏ கூட வெற்றி பெறாததால், அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், 2021 தேர்தலில் ஓசூரில் ஒய்.பிரகாஷ், பர்கூரில் மதியழகன் ஆகியோர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளனர். ஆனால், 33 பேர் கொண்ட அமைச்சரவையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் இடம் அளிக்கவில்லை.



பிரகாஷ் எம்.எல்.ஏ


2011ஆம் ஆண்டு அமைந்த அதிமுக அமைச்சரவையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கே.பி.முனுசாமி, 2016 அதிமுக ஆட்சியில் ஓசூர் எம்.எல்.ஏவான பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஆகியோரை அமைச்சர்களாக நியமித்து அந்த மாவட்டத்திற்கான முக்கியத்துவத்தை ஜெயலலிதா கொடுத்தார். இந்நிலையில், திமுக அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு அமைச்சர் பதவி தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அமைச்சர் ஆகிறாரா அப்பாவு..?


கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதபுரத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிப்பட்ட அப்பாவு, அதிமுக எம்.எல்.ஏவான இன்பதுரை வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. பின்னர், கடந்த 2021 தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்ட அப்பாவு, அதிமுக வேட்பாளரான இன்பதுரையை 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.



சபாநாயகர் அப்பாவு


நெல்லை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அப்பாவுக்கு அமைச்சர் பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சபாநாயகர் ஆக்கப்பட்டார். இந்நிலையில், சபாநாயகரான அப்பாவு, அமைச்சர் பொறுப்பை எதிர்பார்ப்பதால், அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டு, சபாநாயகராக வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும், இல்லையெனில் பாளையங்கோட்டை தொகுதி திமுக எம்.எல்.எவான அதுல் வாகாப்பிற்கு அமைச்சர் பொறுப்பு தரப்படும் என்றும் கூறப்படுகிறது.


அதிர்ச்சியில் அமைச்சர்கள்


தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ள தகவல் வெளியானதில் இருந்து தங்கள் பதவி பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பல அமைச்சர்கள் இருப்பதாகவும், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் பல எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பொறுப்பு தர வேண்டும் என பல வழிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விரைவில் அமைச்சரவை மாற்றப்படுமா அல்லது உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகும் இதே அமைச்சரவை தொடருமா என்பது தெரியவரும்.