பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை சேவை மற்றும் சமர்ப்பண தினமாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதல், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி சேவை தினமாக பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, அவரது பிறந்த தினத்தில் இருந்து ஒரு வாரக்காலம் வரையில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, ரத்த தான முகாம்களை நடத்துவது உள்ளிட்ட நலப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில், கடந்த 17-ம் தேதி அன்று பிரதமரின் பிறந்த நாளினை சேவை மற்றும் சமர்ப்பண தினமாக கொண்டாட பாஜகவினர் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க்கைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் விதமாக, 17-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ரத்த தான மற்றும் சுகாதார முகாம்களை நடத்தவும் பாஜகவினர் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த நிகழ்வுகளை அனைத்தையும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்துமாறு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தியுள்ளார். 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பாரதிய ஜனதா கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாள் விழாவை சேவை வாரமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி கடந்த 17 ஆம் தேதி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பாஜகவினர் தூய்மை பணிகளை மேற்கொண்டு, ஏழை மக்களுக்கு நலஉதவிகளை வழங்கினர். தொடர்ந்து பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வந்த பாஜகவினர், இன்று 6ஆம் நாள் விழாவையொட்டி ஒரு ரூபாய்க்கு காலை உணவு வழங்கி கொண்டாடினர். மயிலாடுதுறையை அடுத்த ஆனந்ததாண்டவபுரம் சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் கிளை தலைவர் வெங்கடேசன் என்பவரது உணவகத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை ஒரு ரூபாய்க்கு காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.




அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் மோடி கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினர். இதில் ஏழை எளிய முதியவர்கள், மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பலரும் ஒரு ரூபாய் கொடுத்து தங்கள் காலை உணவை உண்டனர்.