2023 – 24ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 3-வது முறையாக தன்னுடைய பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். 2022 – 23ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை கடந்த ஆண்டு தாக்கல் செய்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதற்கு முன்னர் திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதனால், இது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் 2வது முழு பட்ஜெட்டாகவும் அவர் தாக்கல் செய்யும் 3வது பட்ஜெட்டாகவும் உள்ளது.
மார்ச் முதல் துறை வாரியான ஆய்வு கூட்டம்
வரும் மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு துறை வாரியாக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, திட்டங்களை அறிவிப்பது குறித்தும், தற்போதைய துறையின் நிலை பற்றியும் ஆய்வு செய்யவுள்ளனர். கடைசியாக, காவல்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடக்கும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு, நிதி அமைச்சர் அலுவலத்தில் இருந்து பட்ஜெட் தொடர்பான தேதி முடிவு செய்யப்பட்டு, அது தலைமைச் செயலாளர் மூலமாக முதல்வர் அலுவலகம் செல்லும். நிதித்துறை தெரிவித்துள்ள 2 அல்லது 3 தேதிகளில் ஒன்றை முதல்வர் டிக் அடித்து, அந்த தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிப்பார்.
என்னென்ன தேதிகள் ? – பிடிஆர் விரும்பிய தேதி எது ?
மார்ச் 16ஆம் தேதியான வியாழக்கிழமை பொது பட்ஜெட்டும், 17ஆம் தேதியான வெள்ளிக்கிழமை வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யலாம் என்றும் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் பட்ஜெட் மீதான விவாதத்தை திங்கள் கிழமை முதல் தொடங்கலாம் என்று ஒரு பரிந்துரையும், பட்ஜெட்டை 20ஆம் தேதியான திங்கள் கிழமை தாக்கல் செய்யலாம் என்று இன்னொரு தேதியையும் நிதி துறை, முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதில், மார்ச் 20ஆம் தேதியான திங்கள் கிழமை அன்றே பட்ஜெட் தாக்கல் செய்ய நிதி அமைச்சர் பிடிஆர் விரும்புகிறார் என்று முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், பிடிஆர் விரும்பும் 20ஆம் தேதி அன்றே பட்ஜெட் தாக்கலை வைத்துக்கொள்ள முதல்வர் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வரும் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது – இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை துறை வாரியான ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அலுவலகம் வெளியிட இருக்கிறது.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ஆளுநர் ஒப்புதல் வேண்டுமா ?
பட்ஜெட் தேதியை முதல்வர் உறுதி செய்த பிறகு, அதற்கான கோப்புகள் சபாநாயகர் மூலம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார். ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்னும் முடித்து வைக்கப்படாத நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை தனியாக கூட்டுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை. அதனால், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை மட்டும் ஆளுநரிடம் இருந்து பெற வேண்டியிருக்கிறது.
எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர் ?
மார்ச் 20ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், அன்றைய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் கூடி, அடுத்த நாளான மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும் அதற்கடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தி, கடைசி நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளிப்பதற்கான தேதிகளும் அறிவிக்கப்படும்.
தொடர்ந்து துறை வாரியான மானிக்கோரிக்கை நடைபெறுகிறதா ? அல்லது மானியக்கோரிக்கை தொடர்பான கூட்டம் தனியாக நடத்தப்படவுள்ளதா என்பதை சபாநாயகர் முடிவு செய்வார்.
இரவு பகலாக உழைக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி நிலமை மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலினே தொடர்ந்து பேசிவரும் நிலையில், அதற்குபிறகு 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலையை சரிக்கட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். அது கடந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே தெரிய வந்த நிலையில், அதன்பிறகான இந்த ஓராண்டில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகளால் தமிழக அரசின் நிதி நிலைமை ஓரளவிற்கு சரியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பதற்கு தன்னுடைய துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்களுடன் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்களை இரவு / பகலாக நடத்தி தற்போதைய பட்ஜெட்டின் இறுதி வடிவத்தை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தயார் செய்துள்ளார்.
உரிமைத் தொகை உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்
ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு எப்போது உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்போகிறோம் என்பதை அறிவிப்போம் என பேசியிருக்கும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட் தாக்கலாகும் 20ஆம் தேதி வந்துவிடும். அதோடு, திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த இன்னும் சில முக்கியமான வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என கூறப்படுகிறது.