டெல்லி குடிமை மையத்தில் நேற்று மீண்டும் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கவுன்சிலர் மயங்கி விழுந்தார்.
டெல்லி மேயர் தேர்வு:
டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றிய நிலையில் தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மேயரை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது. துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா என்பது தொடர்பாக எழுந்த பிரச்சினையால் மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று ஆம் ஆத்மி கட்சி கூற, மேயர் தேர்தலுக்காக 3 முறை மாநகராட்சி கூட்டம் நடந்தபோதும், தொடர்ந்து ஆம் ஆத்மி, பா.ஜனதா இடையே மோதல் ஏற்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆம் ஆத்மி மேயர் வேட்பாளரான ஷெல்லி ஓப்ராய் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 17-ந்தேதி அளித்த தீர்ப்பில், மாநகராட்சி தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என உத்தரவிட்டது. மேலும் 24 மணி நேரத்துக்குள் மாநகராட்சி கூட்டத்தை நடத்துவதற்கான நோட்டீஸ் வெளியிட வேண்டும் எனவும் அறிவித்தனர்.
முடிவுக்கு வந்த மேயர் தேர்தல் குழப்பம்:
இதனை தொடர்ந்து, மேயர் தேர்தலுக்காக மாநகராட்சி கூட்டத்தை பிப். 22-ந்தேதி நடத்துவதற்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்திருந்தார். அதன்படி டெல்லி குடிமை மையத்தில் பிப்.22ஆம் தேதி காலையில் மாநகராட்சி கூட்டம் கூடிய நிலையில், மேயர் தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி தரப்பில் ஷெல்லி ஓப்ராயும், பாஜக சார்பில் ரேகா குப்தாவும் போட்டியிட்டனர். மொத்தம் 266 வாக்குகள் பதிவாகிய நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓப்ராய் 150 வாக்குகள் பெற்று வென்றார். பா.ஜனதாவின் ரேகா குப்தா 116 ஓட்டுகளை பெற்றார். 34 வாக்குகள் வித்தியாசத்தில் ஷெல்லி ஓப்ராய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனால் டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆனால் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகம் இருந்ததால் பாஜக கவுன்சிலர்கள் தேர்தலை நடத்தவிடமால் அமளி செய்தனர். இதனால் ஆம் ஆத்மி, பா.ஜனதா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. நிலைமை மிகவும் குழப்பமானதாக மாறியது, கவுன்சிலர்கள் வாக்குப் பெட்டிகளை கிணற்றில் வீசத் தொடங்கினர்.
நேற்று மீண்டும் தொடங்கிய டெல்லி மாநகராட்சி (எம்சிடி) கூட்டத்தின் போது ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மற்றும் பிஜேபி கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு கவுன்சிலர் மயங்கி விழுந்தார். ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் முனிசிபல் கார்ப்பரேஷனின் நிலைக்குழு உறுப்பினர்களின் தேர்தலை மேலும் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டது.