H.Raja Press Meet: தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் என தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும் செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா கூறியுள்ளார்.


திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்திருந்த எச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்த அவர் அவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "பாட்டாளி மக்கள் கட்சித் நிறுவனர் ”தமிழைத் தேடி” என்ற யாத்திரையை மேற்கொள்ளவுள்ளார். அவரது கூற்றுப்படி, தமிழைத் தேடி யாத்திரை என்றால் தமிழ் தொலைந்து விட்டது என்று தானே பொருள். தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்றால், திராவிடத்தை அழிக்க வேண்டும். திராவிடத்தை அழிக்காத வரை தமிழை காக்க முடியாது.  தமிழ் மொழிக்கு முதல் எதிரியே திராவிடம் தான்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் வேட்பாளர் என்றதும், நாங்கள் அங்கம் வகிக்கக் கூடிய அதிமுக கூட்டணி நிச்சயம் வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. திமுக தனது தேர்தல் அறிக்கையில், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வகையில் புதிய திட்டத்தினை நடைமுறைப் படுத்துவோம் என கூறினர் ஆனால் அதைச் செய்யவில்லை, அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்" என கூறினர்.  


அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர் ஆனால் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துவிட்டார். தங்களின் தேர்தல் அறிக்கையை தங்களால் நிறைவேற்ற முடியாது என திமுக அமைச்சர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.  இதனால் மக்கள் இனி திமுக பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள்.  இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை எனவே எதிர்த்து போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார் என்று தான் பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஹாசனின் ஆதரவு குழப்பத்தை தான் தரும். மேலும், ஜீரோவுடன்  ஜீரோவைக் கூட்டினால்  கணித முறைப்படி ஜீரோதான் வரும் அவ்வாறு தான் கமலஹாசனின் ஆதரவு அமையும்” என எச். ராஜா கூறியுள்ளார்.


பாஜக இடம் பெற்றுள்ள அதிமுக கூட்டணியின்  வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


2021 சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில்  இருந்த காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 


பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.