நாளைய தினத்தில், சட்டப்பேரவையில் பல்வேறு பிரச்னைகளை குறித்து குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், நாளை கூடுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான விவாதமானது பிப்ரவரி 22ஆம் தேதி வரை மட்டுமே நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் காரணமாக, மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதமானது நடத்தப்படாமல், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் பாகமானது, நாளை முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கூடும் கூட்டத்தொடரானது காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடரில் மாற்றம்:
இதற்கு முன்பு , ஜூன் 24 ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என மாற்றம் செய்யப்பட்டது.
வழக்கமாக சட்டசபை தொடங்கும் நேரமானது காலை 10 மணியாக இருந்த நிலையில், இம்முறை , ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையிலான நாட்களில் காலை 9.30 மணி நேர அளவில் தொடங்கவுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நிகழ்வுகள்:
விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி, மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதையடுத்து, கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும்.
பின்னர், வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் திட்டம்:
இந்நிலையில் முதல் நாளிலேயே அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது, ”கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலை அளிக்கின்றன. பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், நாளை சட்டப்பேரவை கூடும் நிலையில், முதல் நாளிலேயே, கள்ளச்சாராயம் விவகாரம் குறித்தும், விலைவாசி குறித்தும் சட்டப்பேரவையில் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழ்நாடு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் , குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதல் நாளிலேயே, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் , எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி வரும் சூழ்நிலையில், நாளைய தினம் சட்டசபை பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: EPS Condemns: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் பலி? ஈபிஎஸ், அண்ணாமலை கண்டனம்..!