Senthil Balaji: ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் கழிக்கும் செந்தில் பாலாஜி! 40வது முறையும் காவல் நீட்டிப்பு!

Senthil Balaji Case: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றுடன் 371 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

வழக்கின் பாதை:

  • கடந்த 2011  ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது,  2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில், போக்குவரத்துறையில் பணியாளர்கள் நியமனத்தில், லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


  • இதையடுத்து செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என  வழக்கு தொடரப்பட்டது. பின்னர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு இந்த வழக்கினை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
  • மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டின்படி, மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், அமலாக்கத்துறை விசாரணை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
  • செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜியின் மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்தது. மேலும்,  இது தொடர்பாக விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.


இதையடுத்து, 39 முறை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது

தற்போதைய நிலை:

இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனுமீது, உத்தரவு பிறப்பிப்பதற்காக,  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, வழக்கு தொடர்பாக வங்கி ஆவணங்கள் கேட்டு மேல்முறையீடு செய்ய உள்ளதால், தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 40வது முறையாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார். 

இந்நிலையில், செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்ட கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் 371 நாட்கள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Crime: தலைக்கேறிய கோபம்! விமான நிலைய ஊழியரை கடித்து வைத்த பெண் பயணி!

Continues below advertisement