நீட் குளறுபடி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வைக்கும் இரண்டு குற்றச்சாட்டுகள் என்னவென்றால் ஒன்று நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது என்றும், மற்றொன்று நீட் தேர்வு நடத்தக்கூடிய தேசிய தேர்வுகள் முகமை அமைப்பின் மீதும் தெரிவித்தனர். எனவே நீட் தேர்வில் பிரச்சினை இல்லை. 


நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை தான் நடத்துகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு குளறுபடி குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு தவறு நடத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரையும் பாதுகாக்க விரும்பவில்லை. 


பிரியங்கா காந்தி பகிர்ந்த வீடியோவில் ஆயிஷி படேல் என்ற மாணவி நீட் பற்றி கூறிய புகாரை அலகாபாத் உயர்நீதிமன்றம் பொய் என கூறியுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை 2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு சிறப்பான ஆண்டு. கிரேஸ் மதிப்பெண் கொடுத்ததை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதனால் கிரேஸ் மதிப்பெண் கொடுபதை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 






கள்ளச்சாராய மரணம் குறித்து கண்டனம் 


தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மற்றொருமுறை துரதிஷ்டவசமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கிறது. கடந்தாண்டு கள்ளச்சாராய உயிரிழப்புகள் நிகழ்ந்தது. அதுபற்றி குற்றச்சாட்டியபோது, திமுக அரசு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். இதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள் என கேட்டார்கள். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கம் அதிகமாக இருக்கிறது. இன்று நடந்திருக்கும் கள்ளச்சாராய மரணத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். 


பள்ளிகளுக்குள் சாதிக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது உண்மைதான். பள்ளிகளில் தேர்தல் நடத்தக்கூடாது. பள்ளிகளில் தேர்தல் நடத்தினால் சாதிகள் எட்டிப்பார்க்கும். பிள்ளைகளின் பெற்றோர்கள் தேர்தலில் தலையிடமாட்டார்களா? சாதி அரசியல் செய்யமாட்டார்களா? பள்ளிகளில் சாதிகள் இருக்கக்கூடாது என்பதை பாஜக ஏற்கிறது. ஆனால் சந்துரு குழு ஆய்வறிக்கையை ஏற்கவில்லை” எனத் தெரிவித்தார்.