தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசியல் களம் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக உள்ளது. திமுக - அதிமுக என்ற போட்டி கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலவி வருகிறது. ஆண்ட கட்சி, ஆளுங்கட்சியான இந்த இரு கட்சிக்கும் போட்டியாக இந்த முறை களத்தில் இறங்கியிருப்பவர் நடிகர் விஜய். 

Continues below advertisement

சிறுபான்மையினர் வாக்குகள்:

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மத்தியில் ஆளுங்கட்சியாக பாஜக இருந்தாலும் பாஜக மீது மதச்சார்புள்ள கட்சி, சனாதன தர்ம கொள்கை, இந்துத்வா கோட்பாடு போன்ற பல காரணங்களால் பாஜக மீதான எதிர்ப்பு மனநிலை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. 

பாஜக-வை கூட்டணியில் வைத்துள்ள இபிஎஸ்:

தமிழ்நாட்டில் சிறுபான்மை வாக்குகளை கவர திமுக, அதிமுக-வும் கடந்த தேர்தல்களில் பல்வேறு வாக்குறுதிகளையும், ஆட்சியின்போது பல செயல்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. இதனால், பாஜக-விற்கு வழக்கமாக கிடைக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் என்பது வரும் தேர்தலில் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

Continues below advertisement

சிறுபான்மையினர் வாக்குகளை கவர திமுக பல்வேறு வியூகங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தவெகவும் காய் நகர்த்தி வருகிறது. தவெக தலைவரான விஜய் அடிப்படையில் கிறிஸ்தவர் என்பதால் அவருக்கு கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகளவில் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளது. மேலும், பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளும் தவெக-விற்கு ஆதரவு அளிக்க தயாராகி வருகின்றனர். திமுக-விற்கு ஆதரவாக பல கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் களத்தில் உள்ளனர். 

ஆனால், பாஜக இருக்கும் காரணத்தால் அதிமுக பக்கம் ஆதரவுக்கரம் நீட்ட கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் தயக்கம் காட்டி வருகின்றனர். இது வரும் தேர்தலில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றே கருதப்படுகிறது. 

என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?

தான் தலைமை பொறுப்பேற்ற பிறகு மிகப்பெரிய தேர்தல் வெற்றியைப் பெற்றுத் தராத எடப்பாடி பழனிசாமிக்கு வரும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய சவாலான தேர்தல் ஆகும். இதனால், அவருக்கு வரும் தேர்தலில் அனைத்து தரப்பினரின் வாக்குகளும் முக்கியம் ஆகும். 

வரும் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை கைப்பற்ற திமுக-வும், தவெக-வும் போட்டியிட்டு வரும் நிலையில் பாஜக-வை கூட்டணியில் வைத்துள்ள அதிமுக என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. உட்கட்சி மோதல், கூட்டணி சிக்கல் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறுபான்மையினர் வாக்குகளை அவர் எப்படி கைப்பற்றப்போகிறார்? என்ற சவாலும் எழுந்துள்ளது.