நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்படும் உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, அனுமதி அட்டை (QR code) வழங்கப்படுவது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி துவங்கப்பட்டதிலிருந்து, அனைத்து உள்ளங்களுக்கு நிகழ்ச்சிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற, காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பாண்டிச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளில் தொண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. க்யூ.ஆர் குறியீடு உடன் கூடிய இந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிகள் வழங்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மகாபலிபுரம் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ளும் 1500 பேருக்கு முன் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. க்யூ.ஆர்., குறியீடு உடன் கூடிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற க்யூ.ஆர்., குறியீடுகள் உண்மையாக கட்சிக்காக உழைப்பவர்கள், சாதாரண தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு கிடைப்பதில்லை என்று அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இதுபோன்ற தலைமை நிலையம் சார்பில் கொடுக்கப்படும் அடையாள அட்டைகளை, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தங்களது உறவினர்களுக்கு மட்டுமே வழங்கி விடுவதாகவும் புகார் இருந்துள்ளது.
இளைஞர்கள் சக்தி வீணாக்குவதாக புகார்
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளர்களிடம் பேசினியில், தமிழகத்தின் பிரதான கட்சிகளாக பார்க்கப்படக்கூடிய திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தாண்டி அதிகளவு இளைஞர்கள் கூட்டம் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளனர். இளைஞர்கள் சக்தியை விஜய் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் மாநில நிர்வாகிகள் சிலரை மட்டுமே நம்புவதால், அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்கிறார்.
இதுபோன்ற கூட்டங்களில் சாதாரண தொண்டர்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது போன்ற வாய்ப்புகள் வழங்குவது கிடையாது. அதற்கு மாற்றாக மாநில நிர்வாகிகளுக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த "பாஸ்" வழங்கப்பட்டு விடுகிறது. மீதம் உள்ள "பாஸ்" மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர் கொடுக்கப்படும் பாஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கு உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விஜய் மக்கள் இயக்கம் காலத்தில் இருந்து பயணிப்பவர்கள், கட்சியின் சாதாரண தொண்டர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால்தான் ஒரு சில இளைஞர்கள் அவரை பார்க்க முடியாமல் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்வதாகவும், இதனால் விபத்துகளும் ஏற்படுவதாகும் தெரிவித்தனர். எனவே கட்சி தலைமை இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனைத்து தொண்டர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.